சினிமா

'இவருக்குள்ளே என்னமோ இருக்கு!' - ரஜினி... சின்னச் சின்ன வியத்தகு ஃப்ளாஷ்பேக்!

'இவருக்குள்ளே என்னமோ இருக்கு!' - ரஜினி... சின்னச் சின்ன வியத்தகு ஃப்ளாஷ்பேக்!

webteam

இந்திய சினிமாவில் புகழின் உச்சம்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழ் நடிகர் என அறியப்பட்டாலும் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவந்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ரஜினி, டிசம்பர் 12, 1950 அன்று பிறந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 25 வயதில் கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு அபார நடிப்பாலும், உழைப்பாலும், பொறுமையாலும் இந்த அளவுக்கு உயர்ந்து சூப்பர் ஸ்டாராகவே இன்னமும் நிலைகொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. 'மூன்று முடிச்சு', 'முள்ளும் மலரும்', 'பில்லா', 'முரட்டு காளை', 'ஜானி', 'தில்லுமுல்லு', 'மூன்று முகம்' உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தன. கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், அவரது ரசிகர்கள் கொடுத்த 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம்தான் அவரின் அடையாளமாகத் திகழ்கிறது.

ரஜினிகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளில், அவரது வாழ்வில் நடந்த சின்னச் சின்ன சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

> ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பாலசந்தரிடம் ஒரு கேள்வியை கேட்டாராம். ஒரு நடிகரிடம் நடிப்பைத் தவிர்த்து வேறு எதை எதிர்ப்பார்க்கிறீர்கள்? என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு "திரைக்கு வெளியே நடிகர் நடிக்கக்கூடாது" என்று பதிலளித்தாராம் பாலசந்தர். அதை இப்போது வரை நடிகர் ரஜினிகாந்த் கடைபிடிப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

> ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அதன்பின்னர், 'தில்லுமுல்லு', 'தளபதி' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் நாகேஷ், ரஜினியுடனான சுவாரஸ்யமான அனுபவங்களை பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்க்கிறேன். அப்போது என் கவனத்தை கவர்ந்தவை, அவரது அடர்ந்த தலைமுடியும், சட்டென்று அடுத்தவர்கள் கவனத்தை கவர்கின்ற வசீகரத் தோற்றமும் தான். அவரது முகத்தை பார்த்தபோது உடனே எனக்கு ஏற்பட்ட எண்ணம், 'இவர் வழக்கமான புதுமுகம் கிடையாது. இவருக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. இவருக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்' என்பதுதான்.

ஆனால் அதேசமயம், தமிழ் திரைப்பட உலகில், சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அளவுக்கு உச்சத்தை அடைவார் என்று அன்றே என்னால் உணர முடிந்தது என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை.

தளபதி படத்தில் 10 நாட்கள் கால் சீட் வாங்கினார்கள். ஆனால், என்னுடைய பகுதியை குறைத்தே காண்பித்தனர் என ரஜினியிடம் கூறினேன். அதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் சிரித்தார். 'என்னடா.. ஒன்னு நமக்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசலாம். அல்லது அவருக்கு ஆரவாகவாவது பேசலாம். எதுவும் பேசாமல் சிரிக்கிறாரே' என நினைத்தேன். அதன்பின்னர்தான் தெரிந்தது, ரஜினி மூன்றாம் நபரை பற்றிய குறைகளை அவர்கள் இல்லாதபோது பேசவே மாட்டார் என்று' என நாகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குறியவர்களின் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் நிறுவனத்தை கவனித்து கொண்டிருந்து பின்னர் சத்யா மூவிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி பல படங்களை தயாரித்தார். அதில் எம்.ஜி.ஆருக்காக கதை ஒன்றை எழுதி வைத்திருந்துள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.

ஆனால் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆன காலகட்டம். அதனால் அப்படத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து அப்படத்தில் ரஜினியை நடிக்க வைத்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த படம்தான் ராணுவ வீரன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.

ரஜினிகாந்த் அரசியல் குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அப்போது குஷ்பு பழைய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அதாவது, "1992 ஆம் ஆண்டே ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று கூறப்பட்டது. அப்போது நான் அரசியலில் இல்லை. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நான் சப்போர்ட் செய்வேன் என தெரிவித்தேன். அதனால் எனக்கு ஒரு விருதே கிடைக்காமல் போனது" என்று கூறியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே, சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அந்த சமயத்தில், ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்து வழிபட்டுள்ளார் ஸ்ரீதேவி. பின்னர், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று தன்னுடைய விரதத்தை நிறைவு செய்துள்ளார். பல நாட்கள் கழித்து இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேவி.

மேலும், "ரஜினி, கமல் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என் அம்மாவுடன் ரஜினி எப்போதுமே நட்பாக இருப்பார். என் அம்மாவுக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும். 'கமலைப் போல் பெரிய ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என ரஜினி என் அம்மாவிடம் கேட்டார். 'கண்டிப்பாக நீ பெரிய ஸ்டாராக வருவாய்' என்று அம்மா சொன்னார். 'அப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்' என ரஜினி சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்" என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சுஹாசினி, "நான் முதன்முதலில் பார்த்த சினிமா ஷூட்டிங் 'மூன்று முடிச்சு'தான். சினிமாவுக்கு புதிது என்பதால் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

அப்போது பாலசந்தரை பார்த்து ரஜினிகாந்த் ரொம்பவே பயப்படுவார். மேல பார் என்றால் கீழே பார்ப்பார், கீழே பார் என்றால் மேலே பார்ப்பார். சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிகாந்த் மட்டுமின்றி பலருக்கும் நடிப்பு பயிலும் கல்லூரியாக இருந்தது இயக்குநர் கே.பாலச்சந்தரும் அவரது கலாகேந்திராவும்தான்" என்று பகிர்ந்திருக்கிறார்.