சினிமா

‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை’ - இயக்குநர் பிரபு சாலமன் பகிர்ந்த சுவாரஸ்யம்

‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை’ - இயக்குநர் பிரபு சாலமன் பகிர்ந்த சுவாரஸ்யம்

சங்கீதா

‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மைனா’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்துப் பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டுள்ளார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன்.

மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘செம்பி’ படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், மூத்த நடிகை கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் புதிய தலைமுறை சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர்.

அதில், ‘செம்பி’ படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பிரபு சாலமன், “ ‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை. மலைக்காட்டில் வாழுகிற ஒரு பாட்டியும், பேத்தியும், தரைக்காட்டில் வாழுகிற சில ஜனங்களும் இவர்கள் எல்லாம் இணைந்து பயணம் செய்யும்போது நடக்கும் விஷயங்கள் தான் படத்தின் கதை. அதாவது ஒருநாள் நடக்கிற பயணம்தான் கதை. இந்தக் கதைக்கு மறைந்த மனோரமா ஆச்சி போன்று ஒருவர் தேவைப்பட்டபோது, கோவை சரளா தான் எனக்கு சரியென்று பட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் மலைக் கிராமங்கள் மக்களிடம் நிறைய கதைகள் இருக்கிறது, அவர்களுக்கு என ஒரு உலகம், ஆச்சரியமான விஷயங்கள் நிறைய இருக்கும், அவர்களைப் போன்றவர்கள் தான் இந்த ‘செம்பி’ படத்தில் வரும் வீரத் தாய் என்ற கதாபாத்திரமும், பேத்தியும் என்று கூறியுள்ளார். சொல்லப்போனால் ‘மலைக்கிராம மக்கள் தான் வாழுறாங்க, நாம பொழச்சிட்டு இருக்கோம்’ என்றும் இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக, அவர்களும் இந்தப் படத்தின் பயணிகளில் ஒருவராக தங்களை நினைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.