நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படம் குறித்து, அதன் இயக்குநரான செல்வராகவன் முக்கிய அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதற்கிடையில், இயக்குநர் செல்வராகவன் - நடிகர் தனுஷ் கூட்டணி "மயக்கம் என்ன" படத்திற்கு அடுத்து, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இதில், கடந்த புத்தாண்டு அன்று ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் போஸ்டர் வெளியானது.
இதையடுத்து மீண்டும் தனுஷுடன், செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’ படத்தை, கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்தப் படத்தில் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதால், இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து, படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் இசையமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.