சினிமா

ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார்கள், அச்சுறுத்தல் கொடுக்கிறார்கள்: சீனு ராமசாமி பேட்டி

ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார்கள், அச்சுறுத்தல் கொடுக்கிறார்கள்: சீனு ராமசாமி பேட்டி

JustinDurai

தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து செய்தியாளர்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “அரசியல், சினிமா தெரிந்த அளவுக்கு சினிமா அரசியல் தெரியல. விஜய் சேதுபது நடிப்பதால் மிகுந்த மன வேதனை அடைந்தேன். தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடிய கதாநாயகன், ஒரு பகுதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது என ட்விட்டரில் பதிவிட்டேன். விஜய் சேதுபதிக்கு எதிராக நான் பேசுவதாக சிலர் சித்தரிக்கிறார்கள்.

நன்றி வணக்கம் என்பது பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு, ‘முதலில் கதை நன்றாக உள்ளதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பின்புதான் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தயாரிப்பு நிறுவனமே தானாக முன்வந்து படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்தார்கள். நானும் நன்றி வணக்கம் என்று கூறி முடித்துக் கொண்டேன்’ என்று விளக்கம் அளித்தார். அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. பின்னர் ஆயுத பூஜை நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.

ஆனால், கடந்த 4 நாட்களாக எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்ந்து கால் மற்றும் மெசேஜ் மூலமாக அச்சுறுத்தல் வருகிறது. ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார்கள். முகம் தெரியாத சில சக்திகள் என்னை தொடர்ந்து ஏன் எச்சரிக்கிறார்கள் என தெரியவில்லை. என்னால் முழுமையாக அனைத்தையும் சொல்ல முடியவில்லை. எழுத்துப்பூர்வமாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டரில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்” என்று பதிவிட்டு இருந்தார்.