Indian 2 movie PT Web
சினிமா

’சமூகநல திட்டங்களை புரிதலேஇல்லாமல் விமர்சிப்பதா?’ - இந்தியன்2-ல் இடம்பெற்ற காட்சி குறித்த விமர்சனம்!

இலவச திட்டங்கள் குறித்த காட்சிகள் இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது அடிப்படை புரிதலே இல்லாதவகையில் அமைந்துள்ளது.

இரா.செந்தில் கரிகாலன்

இயக்குநர் ஷங்கர், கமல் கூட்டணியில்1996-ம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்தியன் தாத்தாவாக கமல் அவருடன் சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதைத்தாண்டி இலவச திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காட்சி குறித்துதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்..

indian 2

இந்தியன் படத்தைப்போலவே இரண்டாவது பாகத்திலும் ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதே படத்தின் மையக்கருவாக இருக்கிறது. முதல் பாகத்தில் - தமிழ்நாடு அளவில் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல், அவர்கள் பெரும் லஞ்சத்துக்கு எதிராக இந்தியன் தாத்தா கொதித்தெழுந்து அவர்களைப் பழி வாங்குவார். இரண்டாவது பாகத்தில் - இந்திய அளவில் தொழிலதிபர்கள், மாபியாக்களை கமல் பழிதீர்ப்பதும், ஒவ்வொரு வீட்டில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை அவர்களின் குடும்பத்தினரே காட்டிக்கொடுப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வழக்கம்போல போகிற போக்கில், விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்களை விமர்சித்தும் கடந்திருக்கின்றனர்.

என்ன மாதிரியான காட்சி இடம்பெற்றிருக்கிறது?

அதுகுறித்த காட்சியில், மக்களின் கைகளில் இருக்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் போன்ற விலையில்லா பொருள்களை வைத்திருக்கும் மக்கள் ஊழல், லஞ்சம் குறித்தும் பேசுவதும், அவர்களை நோக்கி நடிகர் ஜெகன் துப்புவது போலவும் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. விலையில்லா திட்டங்கள் குறித்த அடிப்படை புரிதல்கூட இல்லாததும், இந்திய அளவில் பல்வேறு சமூகக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு இதுபோன்ற திட்டங்கள்தான் காரணம் என்கிற தெளிவின்மையும்தான் இந்த காட்சிகள் மூலம் தெரிகிறது.

indian 2

மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டம் தொடங்கி, இலவச பஸ் பாஸ், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி. செருப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச லேப்டாப், சைக்கிள் என இந்தப் பட்டியல் தமிழ்நாட்டில் நிகழ்த்திய சமூக மாற்றம் என்பது அசாத்தியமானவை. தற்போது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, மகளிருக்கான இலவச பேருந்துத் திட்டம், பெண்களுக்கான கல்வி உதவித் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் என இந்தத் திட்டங்கள் அடுத்தடுத்து பரிமாணங்களைப் பெற்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

indian 2

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பலர் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் இன்னும் பல துறைகளின் மன்னர்களாகவும் உள்நாடு முதல் வெளிநாடு வரை கோலோச்சுவதற்கு இதுபோன்ற விலையில்லா திட்டங்கள்தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் பல மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த இலவச காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாறிய தமிழ்நாடு!

அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம், ஆந்திராவில் அண்ணா கேண்டீனானது.., இப்படிப் பல திட்டங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்...இங்கிருந்து மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் கொண்டுவரப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பயனை உணர்ந்து அதனைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த வரலாறும் உண்டு.., தவிர, இலவசத் திட்டங்களை ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்து வந்த பாஜக உள்ளிட்ட கட்சிகள்கூட, தேர்தல் வாக்குறுதிகளாக இலவசத் திட்டங்களை அறிவிப்பது, தாங்கள் ஆளும் மாநிலங்களில் இலவசத் திட்டங்களை கொண்டு வருவது என பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது...

indian 2

தமிழ்நாட்டில் இப்படி பல சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்ததால்தான், பல ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை தமிழகம் எட்டியிருக்கிறது என பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியிருக்கிறார்... அந்தளவுக்கு தமிழ்நாடு வளர்ச்சியை எட்ட இதுபோன்ற திட்டங்களே காரணமாக அமைந்திருக்கிறது... எல்லாவற்றையும் தாண்டி, ஒரு காட்சியில் அதிகாரி ஒருவரைப் பழிவாங்கும் கமல், உனக்கு கழிவறைக்குக் கூட தங்கம்... ஆனா, நாட்டுல தாலிக்குத் தங்கம் இல்லாம எவ்வளவு பெண்கள் இருக்காங்க தெரியுமா என்கிற கேள்வியும் எழுப்புவார். ஆனால், அதற்கும்கூட நம் மாநிலத்தில் ஒரு திட்டம் இருந்ததும் தற்போது அது அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ந்திருப்பதும்தான் தமிழ்நாட்டின் வரலாறாக இருக்கிறது..