யூடியுப்பில் அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனையை நடிகர் விஜயின் சர்கார் படத்தின் டீசர் முறியடித்துள்ளது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த ‘சர்கார்’ டீசர் நேற்று மாலை வெளியாது. டீசரின் படி விஜய் வெளிநாடுகளில் சுற்றும் பெரிய தொழிலதிபர் என்றும் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஊருக்கு வரும் விஜய்யின் ஓட்டு வேறு ஒருவரால் போடப்பட்டு விட்டது என்றும், இதனால் நமது அரசியலின் பரிதாப நிலையை உணரும் விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக களம் இறங்கி ’சர்கார்’ அமைக்கிறார் என்று ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் கதை கூற தொடங்கிவிட்டனர்.
ஆனால் ’சர்கார்’ டீசரில் கவனித்தக்க விஷயங்களாக ஒரு குடும்பமே தீயிட்டு தற்கொலை செய்துகொள்வது போல் ஒரு காட்சி வருவதும், கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்ற காட்சியும் தமிழகத்தில் நடந்த பல நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. கடைசியில் வரும் 'உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இது தான் நம்ம சர்கார்' என்ற வசனம், இத்திரைப்படம் மிகப்பெரிய அரசியல் படம் என்பதை நிச்சயப்படுத்துகிறது.
இந்நிலையில், சர்க்கார் டீஸர் வெளியானது முதல் அது யூடியுப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பல்வேறு படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் சர்கார் டீசரே பேசுபொருளாக மாறியது. 10 நிமிடங்களில் மெர்சல் படத்தை 10 லட்சம் பேர் பார்த்தது தான் முதசாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், மெர்சல் படத்தின் சாதனையை தற்போது சர்கார் படம் முறியடித்துள்ளது. சர்கார் படத்தை யூடியுப்பில் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சம் பேர் பார்வையிட்டனர். டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 1.5 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், யூடியுப் லைக்ஸ்-ஐ பொறுத்தவரை முதன்முதலாக 10 லட்சம் லைக்ஸ் என்ற சாதனையை மெர்சல் படம் நிகழ்த்தி இருந்தது. தற்போது, சர்கார் படமும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 10 லட்சம் லைக்ஸ் எடுக்க மெர்சல் படத்திற்கு 23 நாட்கள் ஆனது. அதன் பிறகு அவெஞ்சர்ஸ் படம் 21 மணி நேரத்தில் மெர்சல் சாதனையை முறியடித்தது. தற்போது, சர்கார் படம் 4 மணி நேரம் 45 நிமிடங்களில் 10 லட்சம் லைக்ஸ்களை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது வரை 12 லட்சம் பேர் சர்கார் டீசரை லைக்ஸ் செய்துள்ளார். உலக அளவில் அதிக பேர் லைக்ஸ் செய்த டீசர் என்ற சாதனையை சர்கார் படைத்துள்ளது.