‘சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’ என்ற பாடல் இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்த வார்த்தையின் அர்த்தத்தை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் நடித்து விஜய் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்குப் படம் வெளியாகிறது.
படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் பாடலின் தலைப்பை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். பாடலுக்கு பெயர் ‘சிம்டாங்காரன்’ என வைக்கப்பட்டது. இந்தப் பாடல் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் நடித்துள்ள நையாண்டி பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிம்டாங்காரன் என்ற வார்த்தை தமிழில் இல்லை. இதனால் இது தற்போதைய காலகட்டத்தில் வெளியாகும் ‘நையாண்டி வார்த்தைகளுள்’ ஒன்றாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இந்நிலையில் ‘சிம்டாங்காரன்’ வார்த்தையின் அர்த்தத்தை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். அதில், சிம்டாங்காரன் என்றால் “கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன். கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.