சினிமா

இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை தொட்ட ‘சர்கார்’..!

இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை தொட்ட ‘சர்கார்’..!

webteam

சர்கார் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்கார்’.  தீபாவளிக்கு படம் வெளியாகியிருந்தாலும் அதற்கு முன்பே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. படத்தின் கதை தன்னுடையது என வருண் என்பவர் கூற விவகாரம் உயர்நீதிமன்றம் சென்றது. பின்னர் படத்தின் டைட்டில் கார்டில் வருண் பெயரை போட்டுக்கொள்ள முருகதாஸ் ஒகே சொன்னதால் விவகாரம் சமரசத்திற்கு வந்தது.

தீபாவளியன்று வெளியான இப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 3400 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெளியான பின்பும் பிரச்னைதான். படத்தில் வெளியான சில காட்சிகள் அரசின் இலவச திட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் சர்கார் திரைப்படம் ஓடும் திரையங்குகள் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரச்னை விவகாரம் ஒருபுறம் சென்றாலும் படத்தின் வசூல் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தில் பாகுபலியின் வருவாயை காட்டிலும் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

சென்னையில் முதல்நாளில் மட்டும் 2.37 கோடி ரூபாய் எட்டியுள்ள சர்கார் இரண்டாவது நாளில் 2.32 கோடி வருவாய் கண்டுள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் படம் 4.69 கோடி ரூபாய் வருவாயை எட்டியிருக்கிறது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் மொத்தமாக 100 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முழுவதும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.