சினிமா

உடல்நலம் சரியில்லாத நிலையில் 'இரை' வெப்சீரிஸில் நடித்தார் சரத்குமார் - ராதிகா பேச்சு

உடல்நலம் சரியில்லாத நிலையில் 'இரை' வெப்சீரிஸில் நடித்தார் சரத்குமார் - ராதிகா பேச்சு

sharpana

”'இரை’ வெப் சீரிஸில் உடல்நலம் சரியில்லாதபோது சரத்குமார் நடித்தார்” என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது 'இரை' என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ’இரை’ இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி கலை இயக்கம் செய்ய. சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளையும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

’இரை’ ஆஹா ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை ராதிகா, சரத்குமார் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளனர். ராதிகா பேசும்போது, ”எங்கள் நிறுவனத்தில் ’இரை’ வெப் தொடரை தயாரித்தது பெருமை. ராஜேஷ் மிக மிக அற்புதமாக இந்த தொடரை இயக்கியுள்ளார். இதன் வெற்றிக்கு இதில் நடித்த அனைவரும் தான் காரணம், அல்லு அரவிந்த் குறிப்பிட்டு பாராட்டினார். எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். ஆஹாவில் முதல் முறையாக ஒரு க்ரைம் தொடர். தமிழில் இது போல் வந்திருக்காது என்பதை உறுதியாக சொல்கிறேன். பூஜா சரத்குமார் நான் டிரெய்ன் பண்றேன் கூட்டி வாருங்கள் என்றேன்.

பூஜா அவரது வேலையை அற்புதமாக செய்தார். என் கணவர் அவரை கன்வின்ஸ் செய்வது கடினம். ஆனால், அவர் கன்வின்ஸ் ஆகிவிட்டால் அவர் உழைப்பு பிரமிப்பாக இருக்கும். இரையில் ஒரு ஹீரோவாக இல்லாமல் பாத்திரமாக அட்டகாசமாக நடித்துள்ளார். உடல்நலம் நல்லா இல்லாத ஒரு நேரத்தில் நடித்தார் அவருக்கு நன்றி. எல்லோரும் பாருங்கள் பிடிக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். ராதிகாவைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் பேசும்போது,

”இரை அந்த புக்கை படிக்கும்போது கையில் இருந்து கீழே இறக்க முடியவில்லை. அப்படி மிக அழுத்தமாக, மனதை பாதிப்பதாக இருந்தது. அதேபோல் இந்த தொடரையும் நீங்கள் இடைவேளை இல்லாமல் பார்ப்பீர்கள், இந்த தொடரை எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. நிறைய தடங்கல்களுக்கிடையில் தான் இந்த தொடரை எடுத்தோம்.

இந்த தொடரில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். அதற்கு காரணம் ராஜேஷ் தான், அற்புதமாக எடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு தொடர் தான் இது. இந்த தொடர் இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. என் மனைவி என்னை பற்றி இன்று நிறைய பாராட்டி விட்டார். தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.