சினிமா

தடகள வீராங்கனையின் பயோபிக்: ’சாந்தி செளந்தரராஜன்' படப்பிடிப்பு துவக்கம்!

sharpana

முன்னாள் தடகள வீராங்கனை சாந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சாந்தி செளந்தரராஜன் ’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண். ஆனால், அதனைத்தொடர்ந்து நடந்த பாலினச் சோதனையில் அவர் தோல்வியுற்றதால், அந்தப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. புதுக்கோட்டையில், செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பதக்கங்களை குவிக்கவிருக்கும் இளம் தடகள வீர்களுக்கு பயிற்சியளித்து வரும் வலிமிகுந்த சாந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றவிருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சாந்தியின் சொந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் சாந்தி கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 888 புரடொக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.