சினிமா

“என் அகங்காரத்தை உடைத்தது சிறைச்சாலை” - மனம் திறந்த சஞ்சய் தத்

Rasus

சிறைவாசம் தனக்குள் இருந்த அகங்காரத்தை உடைத்ததாக நடிகர் சஞ்சய் தத் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். இதனிடையே மும்பை குண்டு வெடிப்பிற்கு உதவியதாக சஞ்சய் தத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நன்னடத்தை காரணமாக அவர் 8 மாதம் முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது சிறைவாசம் குறித்து சஞ்சய் தத் மனம் திறந்து பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “உண்மையில் சிறைவாசம் எனக்குள் இருந்த அகங்காரத்தை உடைத்து எரிந்தது. சிறையில் ஒரு நல்ல மனிதராக நான் உருவாவேன். தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டதோடு சிறந்த மனிதராகவும் உருவாகினேன். குடும்பம், நெருங்கிய நண்பர்கள், பிடித்தவர்கள் என அனைவரையும் விட்டுவிட்டு சிறையில் வாழ்வது என்பது கடினமான விஷயம்தான். சிறைவாச நேரங்களில் எப்படி எனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். மண் பானையில் தண்ணீர் குடிக்க கற்றதோடு குப்பைகளை குப்பைத் தொட்டியிலும் போடவும் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறையும் கலாச்சார திருவிழா சிறையில் நடக்கும். அப்போது பாடல்கள், நடனம், உரையாடல்கள் என அனைத்தும் இடம்பெறும். சிறையிலும் எனக்கு நண்பர்கள் உண்டு. என் கடினமான நேரங்களில், என் மனம் சரியில்லாமல் காணப்படும்போது அவர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள்” என மனம் திறந்து பேசியுள்ளார்.