சினிமா

’யுடர்ன்’ ரீமேக்கில் நடிக்க இதுதான் காரணம்: சமந்தா

webteam

’யுடர்ன்’ படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம் என்று நடிகை சமந்தா கூறினார். 

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர் 8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் 'யு-டர்ன்'. கன்னடத்தில் ஹிட்டான 'யு-டர்ன்' படத்தின் ரீமேக் இது. கன்னடத்தில் இயக்கிய பவன்குமார் இதையும் இயக்கி இருக்கிறார். சமந்தா ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பை கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. 

படம் பற்றி சமந்தா கூறும்போது, ‘இதன் டிரைலர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதைதான் படத்தின் ஹீரோ. ’லூசியா’ படத்தில் இருந்தே நான், பவன் குமாரின் ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இது வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். யதார்த்தமான கேரக்டர்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்து முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியில் நடிக்க வேண்டும். அது சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் உணர்கிறேன்’ என்றார்.


இயக்குனர் பவன்குமார் பேசும்போது, ’இந்த யு-டர்ன், கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் திரில்லாக இருக்கும். கன்னட படம் டிரைலர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காகத் தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்’ என்றார்.


’நான் சென்னை பையன். தமிழில் தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி. இயக்குனர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதை சரியாக கேட்டு வாங்குவார். 10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதை பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார், நிறைய ட்விஸ்ட் இருக்கு’ என்றார் ராகுல் ரவீந்திரன்.

தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு, தனஞ்செயன், ஆடுகளம் நரேன், ஆதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.