வாடகைத் தாயான ‘யசோதா’வுக்கு வித்தியாசமான ஒரு மருத்துமனையில் நிகழும் சம்பவங்களே சமந்தா நடித்து வெளியாகியிருக்கும் ‘யசோதா’ படத்தின் ஒன்லைன்.
மர்மமான முறையில் ஒரு ஹாலிவுட் நடிகை கொல்லப்படுகிறார். அதைப் பற்றி துப்புத் துலக்க கிளம்புகிறது ஒரு காவல்துறைப் படை. காவல்துறை செல்லும் இடமெல்லாம் மர்டர்களே பதிலாக வர, அடுத்து என்ன செய்வது என திக்குமுக்காடிப் போகிறார்கள். குடும்பச்சூழல் காரணமாக வாடகைத் தாயாகும் யசோதா, 'ஈவா' என்கிற தனியார் நிறுவனத்தில் பராமரிக்கப்படுகிறார். மது என்பவர் நடத்தும் இந்த க்ளினிக்கில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்கிறார் யசோதா. அங்கிருக்கும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் சாமர்த்தியமாய் நுழையும் யசோதா அங்கு நடக்கும் தில்லாலங்கடிகளைக் கண்டறிகிறார். இந்த இரண்டு கதைகளும் எப்படி இணைகிறது; இந்த தனியார் நிறுவனம் உண்மையில் எதைத் தயார் செய்கிறார்கள் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்கிறது இந்த ‘யசோதா’.
யசோதாவாக சமந்தா. ‘ஃபேமிலி மேன் 2’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ வரிசையில் இந்தப் படத்திலும் சமந்தாவுக்கு அழுத்தமானதொரு வேடம். குறிப்பாக நிறைய சண்டைக் காட்சிகள். ஒவ்வொன்றிலும் பாடி டபுள் எதுவும் இல்லாமல் சிறப்பாக சண்டை செய்திருக்கிறார் சாம். டப்பிங்கும் அவரே என்பதால் கதாபாத்திரத்துடன் இன்னும் நம்மால் ஒன்ற முடிகிறது. படம் தொய்வடையும் போதெல்லாம் முழுமையாக அதைத் தாங்குவதும் சமந்தா தான். எதிர்மறை வேடமான மது என்னும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி. ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரலட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். மருத்துவராக உன்னி முகுந்தன், காவல்துறை கும்பலில் சம்பத், முரளி ஷர்மா, அரசியல்வாதியாக ராவ் ரமேஷ் என நாம் பார்த்துப் பழகிய பல முகங்கள் படத்தில் வந்து போகிறார்கள்.
' ஓர் இரவு', ' அம்புலி' , ' ஆ' மாதிரியான வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி & ஹரிஷ் கூட்டணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். அழகு சாதனப் பொருட்களுக்குப் பின் நடக்கும் சில பகீர் கிளப்பும் விஷயங்களைச் சொல்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் என்கிற வகையில் புதியதொரு விஷயத்தைப் பேசியிருப்பதற்குப் பாராட்டுகள். அதே சமயம், படத்தில் வரும் ஏகப்பட்ட கிளைக் கதைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை ரொம்பவே சோதிக்கிறது.
'நீ என்ன ஃபாலோ பண்ணினியா. நீ ஃபாலோ பண்றத நானும் ஃபாலோ பண்ணினேன்' டைப்பில் மாறி மாறி எல்லாமே எல்லோரும் தெரிந்தே தான் செய்தோம் மாதிரியாக விரியும் காட்சிகள் போர் அடிக்கின்றன. சம்பத் துப்புத் துலக்கும் காட்சிகளும், 'இது கிச்சன், சமைக்கலாம், அரைக்கலாம்' டைப்பில் நீள்கின்றன. இரண்டு மணி நேர படம் தான் என்றாலும், எல்லோருக்கும் ஒரு ஃபிளாஷ்பேக் தேவை என்கிற சம்பிரதாய சடங்குகளால் பல மணி நேரங்கள் திரையரங்கில் அமர்ந்திருந்த உணர்வைத் தந்துவிடுகிறது.
வரலட்சுமி, உன்னி முகந்தன் ஃபிளாஷ்பேக் காட்சிக்கே இன்னொரு ஃபிளாஷ்பேக் காட்சி என நீளும் காட்சிகள் நன்றாகவே குறைத்திருக்கலாம். அதைப் போலவே அழுத்தமே இல்லாமல் உருவாக்கப்பட்ட சில கதாபாத்திரங்களும், அதற்காக நடத்தப்படும் பழி தீர்த்தல்களும் எந்த உணர்வையும் கடத்தாமல் சென்றுவிடுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம். மணி ஷர்மாவின் இசையில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தின் கலை இயக்கம் சிறப்பாக இருந்தாலும், மோசமான சிஜி அதைக் கீழிறக்கிவிடுகிறது.
வாடகைத் தாய், போதைப் பொருள், அழகு சாதனப் பொருட்கள் என பல விஷயங்களை மிக்ஸியில் போட்டு அரைக்காமல், ஒரு விஷயத்தை மட்டும் மையப்படுத்தி எடுத்திருந்தால், யசோதா நிச்சயம் ஈர்த்திருக்கும்.
- கார்த்தி