சினிமா

‘இனி எப்போதும் அது இல்லை’-சமந்தாவின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது தந்தை உருக்கம்

‘இனி எப்போதும் அது இல்லை’-சமந்தாவின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது தந்தை உருக்கம்

சங்கீதா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தாவின் தந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளின் திருமண முறிவு குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

‘யே மாய சேசாவே’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் மலர்ந்து பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்தனர் சமந்தா - நாகசைதன்யா தம்பதி. பின்னர், இருவருமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக இருவரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக அறிவித்தனர். இந்த செய்தி, திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ரசகிர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களது பிரிவுக்கான காரணம் இதுவரை தெரியாதநிலையில், இருவரும் தத்தமது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தப் பிரிவின்போது அதிகம் விமர்சிக்கப்பட்டவர் சமந்தார். ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இவர்களின் பிரிவால் சமந்தாவின் தந்தை தான் மிகவும் அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்பட்டது. அப்போது பேட்டியளித்த அவர், “சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து விஷயத்தைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இவர்களுடைய கருத்து வேறுபாடு குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும். இந்த நிலைமை சீராகிவிடும் என்று நம்பினேன்.

ஆனால், அப்படி நடக்கவே இல்லை. இவர்களுக்கிடையே இருந்த பிரச்சினை நாட்கள் செல்லச் செல்ல முற்றிவிட்டது. எனது மகள் எந்த முடிவெடுத்தாலும் தெளிவாகத்தான் எடுப்பார். அதேபோல் இந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய முறை யோசித்து இருப்பார் என்று நான் நம்புகிறேன். என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வெகுநாட்கள் கழித்து சமந்தா - நாகசைதன்யா திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து, சமந்தாவின் தந்தை சமூவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது; இனி எப்போதும் அது இல்லை!!! எனவே, ஒரு புதிய கதை மற்றும் அத்தியாயத்தை துவங்குவோம் !!!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "உங்கள் அனைவரின் உணர்வுகளுக்கும் நன்றி. ஆம், அந்த உணர்ச்சிகளிலிருந்து நான் வெளிவர நீண்ட காலம் ஆகிவிட்டது. வாழ்க்கை மிகவும் குறுகியது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.