ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகம், தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த இணையத் தொடர் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இணையத் தொடர் 'ஃபேமிலி மேன்'. கற்பனையில் உருவாக்கப்பட்ட Threat Analysis and Surveillance Cell அதிகாரியான மானோஜ் பாஜ்பாய் தேசத்தின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் குழுக்களை தேடி கண்டறியும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.
ஒருபுறம் உளவு அதிகாரியாகவும், இன்னொருபுறம் குடும்பத்தலைவனாகவும் அவர் சந்திக்கும் சிக்கல்களை பின்னணியாகக் கொண்ட ஃபேமிலி மேன் தொடரை ராஜ் மற்றும் DK இணைந்து இயக்கியிருந்தனர்.
2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் தற்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அமேசான் பிரைம் தளத்தில் ஜூன் 4-ம் தேதி ஃபேமிலி மேன் -2 வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. சென்னையில் நடக்கவுள்ள தீவிரவாத தாக்குதலை நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலரில், ISIS அமைப்புக்கு அங்குள்ள கலகக் குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என சென்னையை தொடர்பு படுத்திய வசனம் இடம்பெற்றுள்ளது.
அதோடு, 'ராஜி' எனும் போராளி தோற்றத்தில் வரும் சமந்தா, நான் அவர்கள் எல்லோரையும் சாகடிப்பேன் என்கிறார். இலங்கை வரைபடமும், போராளிகள் பயிற்சி பெறும் காட்சியும் கூட ஃபேமிலி மேன் - 2 டிரைலரில் இருக்கிறது. இதனால், தமிழ் மற்றும் தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
அதனால், #Familyman2_Against_Tamils என்கிற Hash Tag-ல் இந்த இணையத் தொடருக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா தமிழர்களுக்கு எதிரான இந்தத் தொடரில் இருந்து நடித்திருக்கக் கூடாது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.