சமந்தா - கொண்டா சுரேகா புதிய தலைமுறை
சினிமா

“என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்” - அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு சமந்தா காட்டமான அறிக்கை!

ஜெ.நிவேதா

பிரபல நட்சத்திர ஜோடியாக இருந்த சமந்தா - நாக சைதன்யாவின் மணமுறிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திர சேகர் ராவின் மகன் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று, அம்மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா பேசியிருப்பது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

சமந்தா - நாக சைதன்யா - நாகர்ஜூனா - கொண்டா சுரேகா

ரசிகர்களின் மனம் கவர்ந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டு பரஸ்பரமாக பிரிந்தனர். இது நடந்த பல வருடங்கள் ஆன நிலையில், இந்த ஜோடியின் பிரிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று, தற்போதைய வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா குற்றம்சாட்டியுள்ளார். இது ஆந்திர அரசியலிலும், சினிமாவிலும் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.

தன் பேட்டியில், சமந்தா மீது ராமாராவ் விருப்பம் கொண்டதாகவும், அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜூனாவின் குடும்பமே சமந்தாவை வற்புறுத்தியதாகவும் சர்ச்சையளிக்கும் பேட்டியை அளித்திருந்தார் அமைச்சர் கொண்டா சுரேகா. நாகர்ஜூனா குடும்பத்தின் செயல்களை ஏற்காத சமந்தா, அதனால்தான் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாகவும் சுரேகா தன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கொண்டா சுரேகா - சமந்தா

அமைச்சரின் இந்த கருத்துக்கு நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா, கடும் கண்டனங்களை தெரிவித்தார். “அமைச்சர் கொண்டா சுரேகா அவர்களின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை, உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும்.

ஒரு பெண்ணாக பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், எங்கள் குடும்பத்திற்கு எதிராக சொன்ன கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா காட்டமாக இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

“ஒரு பெண்ணாக இருந்து...

  • பல இடர்களிலில் இருந்து வெளியேறி வந்து வேலை செய்யவும்...

  • பல நேரங்களில் பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் துறையில் சர்வைவ் செய்யவும்...

  • காதலில் விழுந்து, பின் அதிலிருந்து மீண்டு வரவும்...

  • ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நின்று சண்டைபோடவும்...

அளவு கடந்த தைரியமும் நம்பிக்கையும் ஒருவருக்கு வேண்டும்.

ஆகவே கொண்டா சுரேகா அவர்களே...

என்னுடைய இந்த பயணம் என்னை எப்படி மாற்றியுள்ளது என்பதில் நான் எப்போதும் மிகவும் பெருமை கொள்வேன். தயவுசெய்து என்னுடைய பயணத்தை நீங்கள் சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உள்ள உங்களின் வார்த்தை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

சமந்தா

தனிநபர்களின் தனியுரிமையை மதித்து, பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ஊகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தனிப்பட்டதாக நாங்கள் ஒரு விஷயத்தை வைத்திருப்பது என்பது, தவறான விளக்கத்தை யார் வேண்டுமானாலும் தரலாம் என்றாகாது

சமந்தா வெளியிட்ட அறிக்கை

நான் தெளிவுப்படுத்த நினைக்கும் இன்னொரு விஷயம், எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வையுங்கள்.

நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், இனியும் அப்படி இருக்கவே விரும்புகிறேன்” என்றுள்ளார். சமந்தாவின் இந்த காட்டமான பதிவுக்குப் பின்னாவது, கொண்டா சுரேகா தன் கருத்தை திரும்ப பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.