தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படாத விடுதிகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி வருகிறோம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் காவல் மருத்துவமனை வளாகத்தில் "நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடம்" சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதே மிகப்பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சினையை யாரிடமும் தெரிவிக்க இயலாமல் மனவேதனைக்கு உள்ளாகும் குழந்தைகளே அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரு எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள முடியம்.
இந்தத் திட்டம் அவ்வளவு எளிதல்ல. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனக்கு இந்தத் திட்டம் தெரியவந்தது. இது இன்னும் நிறையப் பேருக்கு தெரிய வேண்டும். இதன்மூலம் பல நபர்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள். அதிலும், நாள் ஒன்றுக்கு 500 அழைப்பு என்பது சாதாரணமான விசயம் அல்ல” என்று தெரிவித்தார்.
முன்னதாக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “நிர்பயா திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அது தற்போது சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பெண்களுக்கு பாதுக்காப்பான ஒரு தமிழகம் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக சமூக நலத்துறையுடன் காவல்துறை பங்கு முக்கியமாக இருக்கின்றது.
181 உதவி எண் பெண்களுக்காக சமூக நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண் கவலர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக அந்த வாகனம் அந்த இடத்திற்கு சென்று விடும். அது போல பலத்திட்டங்கள் பெண்களுக்காக செயல்பட்டு வருகிறது. குடும்பம் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் பிள்ளைகளும் சரியாக இருப்பார்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம் பல நபர்கள் பயன் பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக 181 அழைப்பு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள் வருகின்றது. அதில் தமிழகம் முழுவதும் இந்த அழைப்பினை ஏற்று உடனடியாக தீர்வு காண்பதை பார்க்க முடிகிறது” என்று குறிப்பிட்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசும்போது, “ஒரு ஆண்டுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த கவுன்சிலிங் சென்டர் மூலம் 500 பேருக்கு கவுன்சிலிங் கொடுப்பட்டதில், 134 பேருக்கு பாசிட்டிவாக கவுன்சிலிங் நடைபெற்றது. வீட்டிற்கே சென்று கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், "பள்ளிகள் நடத்தி வரக்கூடிய விடுதிகள், அமைப்புகள் நடத்தும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் என அனைத்தும் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பதிவு செய்யப்படாமல் இருந்தால் முதல்முறை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆலோசனை மையத்திற்கு பெண்களிடமிருந்து வரும் அழைப்புகளின் மூலம் குழந்தைத் திருமணங்கள் தடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.