சினிமா

கோவா திரைப்பட விழா: பெயரை காரணம் காட்டி திரையிட மத்திய அரசு எதிர்ப்பு

கோவா திரைப்பட விழா: பெயரை காரணம் காட்டி திரையிட மத்திய அரசு எதிர்ப்பு

webteam

கோவா திரைப்பட விழாவில் ’செக்சி துர்கா’, ’நியூட்’ திரைப்படங்களின் பெயர்களை காரணம் காட்டி திரையிட மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவிலான திரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் பெற்றது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா.‌ 200க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழா ஆண்டுதோறும் கோவாவில் நடைபெற்று வருகிறது. 48 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு நடக்கும் சர்வதேச திரைப்பட விழா வரும் 20 ‌ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‌

இந்த விழாவில் சர்வதேச திரைப்படங்களுடன் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் படங்களை சுஜோய் கோஷ் தலைமையிலான குழு தேர்வு செய்து, பட்டியலை வெளியிட்டது. அவற்றில், மலையாளத் திரைப்படமான 'செக்சி துர்கா', மராத்திய படம் 'நியூட்' ஆகியவையும் அடக்கம். இந்நிலையில் இவற்றின் தலைப்புகளை காரணம் காட்டி திரைப்பட விழாவில் திரையிட மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தேர்வுக் குழு தலைவர் சுஜோய் கோஷ் பதவி விலகியுள்ளார். அவரைத் தொடர்ந்து தேர்வுக் குழு உறுப்பினர்களான இயக்குநர்கள் அப்பூர்வா அஷ்ரானி மற்றும் ஜியான் கொர்ரியா ஆகியோரும் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க 'செக்சி துர்கா' படத்தின் இயக்குநர் சனல்குமார் சசிதரன், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், திரைப்பட விழா குழுவினருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சர்‌தேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள கோவா திரைப்பட விழா சந்தித்து வரும் சர்ச்சைகள் கலைஞர்களையும், சினிமா ஆர்வலர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.