சினிமா

வெற்றி வந்தவுடன் நடிகர்கள் மாறிவிடக்கூடாது - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர்

வெற்றி வந்தவுடன் நடிகர்கள் மாறிவிடக்கூடாது - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர்

கலிலுல்லா

நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால்தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும் என மாநாடு வெற்றிவிழாவில் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

மாநாடு வெற்றி விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்தரசேகர் பேசுகையில், ''சுரேஷ் காமாட்சி 'மாநாடு' திரைப்படம் மூலம் நன்றாக சம்பாதித்து விட்டார். எனவே நட்சத்திர விடுதியில் கூட இந்த வெற்றி விழாவை கொண்டாடி இருக்க முடியும். நல்ல திரைக்கதை, நடிகர்களை உச்சத்தில் கொண்டுபோய் வைக்கும், மாநாடு படம் சிம்புவை நல்ல உயரத்திற்கு கொண்டுபோய் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா அட்டகாசமாக நடித்துள்ளார்.

கர்ணம் தப்பினால் மரணம் என்பதுபோல் உள்ள கதைதான் 'மாநாடு' . இதன் மூலம் புதிய ஜேனரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்தில் வரும் மத அரசியல் காட்சி, இந்தியாவையும் , வாரிசு அரசியல் காட்சி தமிழ்நாட்டையும் இணைத்துள்ளது. படத்தில் இசையை கேட்டு மிரண்டு போனேன்; இளையராஜாவின் 2k version யுவன்சங்கர் ராஜா.

இளையராஜா பல இயக்குநர்களிடம், "என்னடா குப்பைபோல படத்த எடுத்து வச்சுருக்க" என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அதுபோன்ற படத்திற்கும் தனது இசை மூலம் புதிய உயிரோட்டத்தை கொடுத்து விடுவார். வெற்றி வந்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என, என் பிள்ளைக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அதுபோல சுரேஷ் காமாட்சி அடக்கத்துடன் இருக்கிறார். தீப்பெட்டியில் உரசினால் தீக்குச்சிதான் எரியும், பெட்டி எரியாது. காரணம் திக்குச்சியின் மண்டைக் கனம்.

கடும் வயிற்றுப்போக்கின் இடையே மாநாடு படத்தின் சில காட்சியில் நடித்தேன். "நான் உங்களுக்காகவே உழைத்து..உழைத்து.." என வசனம் பேசி ஒரு காட்சியில் நடித்ததை தவிர நான் இந்த படத்தில் என்ன செய்தேன்..? ஆனால், அனைவரும் பாராட்டுகின்றனர். படத்தின் கதாநாயகன் இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும். அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே , படம் வெளிவந்த பிறகும் இருந்தால்தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும்.

3 படங்களில் முதலமைச்சராக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை'' என்றார்.