தலைமைப் பண்புக்கு நடிகர் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருவதாக அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் “எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் ‘சர்கார்’ அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம்” என்று பரபரப்பான அரசியல் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் “நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். ஒருவேளை உண்மையில் முதல்வரானால், லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதனை செய்வேன்” என்று கூறியிருந்தார். அவரின் பேச்சு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதிய தலைமுறைக்கு நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நெல்லையில் பேட்டியளித்தார். அப்போது ‘சர்கார்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதில் இருந்து நானும் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 'உசுபேத்தும் நபரிடம் உஷாராகவும், கடுப்பேத்தும் நபரிடம் கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்' என்றார். "இவ்வளவு வயதாகியும் நமக்கு தெரியாமல் போனதே என நானே எனது பிள்ளையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்" என்றார்.
மேலும் கொஞ்சம் கொஞ்சமாக தலைமைப் பண்புக்கு விஜய் தயாராகி வருகிறார் என நம்புகிறேன் என சந்திரசேகர் தெரிவித்தார். விஜயின் வாழ்க்கை முறை, பேச்சு, நடவடிக்கையை கவனித்து வருவதில் இருந்து எனக்கு தெரிகிறது, நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது அவரது சினிமா, தற்போது சினிமா மூலம் விஜய் நல்ல விஷயங்களை கூறி வருவதால் நடிகராக எனக்கு பிடிக்கிறது என்றார். இதனைதொடர்ந்து அரசியல் குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்து கணிக்கத்தான் முடியும்; விஜய் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.