சினிமா

விஷால் அலுவலகத்தில் ரூ 45லட்சம் மோசடி நடந்ததாக காவல்துறையில் புகார்

விஷால் அலுவலகத்தில் ரூ 45லட்சம் மோசடி நடந்ததாக காவல்துறையில் புகார்

webteam

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ. 45 லட்சம் கையாடல் செய்து மோசடி நடந்துள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக விஷால் ஃபிலிம் பேக்ட்ரி என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் கே.ஜி.எப், ஆம்பள, உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். இதன் அலுவலகம் சென்னை வடபழனி குமரன் காலனியில் இயங்கி வருகிறது.


இந்நிலையில் இவரது தயாரிப்பு அலுவலக மேலாளர் அரி என்பவர் வடபழனி காவல்துறை உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசத்திடம் தங்களது அலுவலகத்தில் பணி புரிந்த பெண் ஒருவர் ரூ. 45 லட்சம் பணத்தைக் கையாடல் செய்து விட்டதாகப் புகார் அளித்துள்ளார்.


அவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ "நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் பணிபுரிந்து வந்த பெண் ரூ. 45 லட்சம் பணத்தைக் கையாடல் செய்து விட்டது தெரிய வந்துள்ளது. ஆவணங்களைச் சரிபார்த்தபோது அந்தப் பெண் சிறிது சிறிதாகப் பணத்தைக் கையாடல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


6 வருடமாக பணிபுரிந்து வந்த அந்தப் பெண் கையாடல் செய்த பணத்தின் மூலமாகச் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். ஆகையால் கோடிக்கணக்கில் பணத்தைக் கையாடல் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்தப் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகாரைப் பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறைக்குப் புகார் மனுவை அனுப்பி வைத்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்தது உறுதியானால் இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.