ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதே ஆகஸ்ட் மாத இணைய இதழில் அறிவு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது ரோலிங் ஸ்டோன்.
சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் ’நீயே ஒளி’ பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான ’தெருக்குரல்’ அறிவின் படம், அதில் இடம் பெறவில்லை.
” ‘தெருக்குரல்’அறிவு படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை” என்றும் ”அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். அவரின், பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. பலரும் பாடகர் அறிவுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில், ரோலிங் ஸ்டோன் அதே ஆகஸ்ட் மாத இணைய இதழின் அட்டைப்படத்தில் அறிவு படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.