Pathu Thala ScreenShot
சினிமா

#FactCheck | ’பத்து தல’ படத்தை காண வந்த நாடோடி பழங்குடி பெண்ணை அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர்.. நடந்தது என்ன?

நாடோடி பழங்குடி பெண் என்பதற்காக காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் படம் பார்க்க உள்ளே விட மறுத்த ரோகிணி திரையரங்க நிர்வாகத்துக்கு எதிராக பலரும் கொதித்துப்போய் பதிவிட்டு வருகிறார்கள்.

Janani Govindhan

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது பத்து தல படம். ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியான போதே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரிலீஸ் நாளான இன்று படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்கை நோக்கி ஆவலோடு குவிந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி சில்வர் ஸ்க்ரீனில் சிம்புவின் பத்து தல படத்தை காண நாடோடி பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பிள்ளையுடன் டிக்கெட் எடுத்திருக்கிறார்.

படம் பார்க்க உள்ளே செல்ல முற்பட்ட போது தியேட்டர் ஊழியர்கள் சிலர் நாடோடி பழங்குடி பெண்ணிடம் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், வீடியோவாக எடுத்ததோடு, நாடோடி பழங்குடி பெண்ணை அனுமதிக்கச் சொல்லியும் ரோகினி திரையரங்க ஊழியர் உள்ளே விடாமல் புறக்கணித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு பலரது கண்டனங்களையும் பெற்றிருக்கிறது. நாடோடி பழங்குடி பெண் என்பதற்காக காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் படம் பார்க்க உள்ளே விட மறுத்த ரோகினி திரையரங்க நிர்வாகத்துக்கு எதிராக பலரும் கொதித்துப்போய் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், இந்த விவகாரம் தங்கள் நிர்வாக கவனத்துக்கு வந்ததும் படம் தொடங்குவதற்கு முன்பே புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் நாடோடி பழங்குடி பெண் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டுவிட்டார் என்றும், U/A சான்றிதழ் கொண்ட படமாக இருந்தால் பிள்ளையுடன் வந்த பெண்ணை முதலில் அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள் என ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிக்கையை கண்ட பலரும், ”ரோகினி திரையரங்க நிர்வாகத்தின் விளக்கம் முற்றிலும் அபத்தமாக இருக்கிறது. விவகாரத்தை திசை திருப்ப அனுமதி மறுக்கப்பட்ட அந்த நாடோடி பழங்குடியினர்கள் மீதே குழந்தைகளை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டும் வகையில் குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை” என கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இருப்பினும், டிக்கெட் வைத்திருந்தும் அந்த நாடோடி பழங்குடி பெண்ணை அனுமதிக்காதது தவறான செயல் எனக் குறிப்பிட்டு பலரும் கண்டித்திருக்கிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இது குறித்த வீடியோவை பகிர்ந்து தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதில், “தாமதமாக அனுமதித்ததாக தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டிருக்கிறார்.