ஏ3வி (A3V) சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ’ரோகிணி’ பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் விக்ரமன், ’நான், ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்கியபோது அதில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க விமலை அணுகினேன். அதற்கு முன் அவருடன் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கமாட்டேன். இயக்குனர் பூபதி பாண்டியன் கலாய்ப்பதில் வல்லவர்.. அவர்தான் என் படங்களை முதன்முதலில் கலாய்த்தவர். ’தேவதையை கண்டேன்’ படத்தில் சூர்ய வம்சம் படத்தை கலாய்த்தவர், இதில் எந்தப் படத்தை கலாய்த்திருக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.
ரோபோ சங்கர் பேசும் போது, ‘ சில படங்களில் நடிக்கும்போதே தெரிந்துவிடும் அது நிச்சயம் ஹிட்டாகும் என்று. மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப்போல இந்த படத்து காமெடியும் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வடிவேலுக்கு எப்படி ‘வின்னர்’ அமைந்ததோ, அப்படி எனக்கு இந்தப்படம் இருக்கும்’ என்றார்.
கதாநாயகி ஆனந்தி பேசும்போது, ’இந்தப்படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய முயற்சி பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன்’ என்றார். பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகிறது.