‘எல்கேஜி’ படத்தின் வெற்றியை அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா சாமி வேடத்தில் நடிக்கிறார். படத்தின் மொத்த கதையும் நயன் மீதுதான் பயணிக்க உள்ளது. இதற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் "மூக்குத்தி அம்மன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஒரு பாதி முகத்துடன் அம்மன் வேடத்தில் நயன்தாரா இருக்கிறார். பின்னர், உடனடியாக முழுத்தோற்றத்தில் உள்ள படத்தினை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அம்மன் தோற்றத்தில் நயன்தாரா கையில் சூலத்துடன் இருக்கிறார்.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். அதில், “இதுவொரு நகைச்சுவை பாணியிலான சாமிப் படமாக இருக்காது. ஒரு சாமிப் படத்தில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் இதில் இருக்கும். நாம் பார்த்து வளர்ந்த சாமிப் படங்களில் உள்ளவைகள் இதிலும் காணப்படும். பழைய நினைவுகளை நமக்கு ஏற்படுத்தும். அதேபோல், தற்காலத்திற்கு ஏற்றவாறும் இருக்கும்.
ஒரு பெரிய ஸ்டார் இந்த கதாபாத்திரத்திற்கு தேவை என நினைத்தேன். நயன்தாராவை மனதில் வைத்து இந்த கதாபாத்திரத்தை எழுதவில்லை. திரையில் கம்பீரமான தோற்றத்துடன் வரக்கூடிய நடிகையைத்தான் யோசித்தேன். இந்த கதையை ஹீரோயின்களிடம் சொல்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. அதனால், எனக்கு நெருக்கமான அதேபோல் நான் சொன்னால் ஒத்துக்கொள்கிறவர்களிடம் சொல்வது என முடிவு செய்தேன்.
நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். நான் பல நண்பர்களிடம் கதை சொல்லி வந்தது அவருக்குத் தெரியவந்திருக்கிறது. ஒரு நாள் ஒரு போன் செய்து எல்லோரிடமும் கதை சொல்கிறாய், ஏன் என்னிடம் மட்டும் சொல்லவில்லை என்று கேட்டார். அவர் போன் செய்தது 5 மணிக்கு. உடனடியாக சென்று 7 மணியளவில் கதை சொல்ல ஆரம்பித்தேன். 7.30 மணிக்கு அவர் ஒத்துக் கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார். தெரிந்த முகங்கள் பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார்” என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.