ரிஷி கபூரின் மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்(67). 1970-ம் ஆண்டில் 'மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமானார். இதற்கு அவர் தேசிய விருதும் வாங்கினார். 1973-ல் வெளியான ' பாபி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ரிஷி கபூர் 2018-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்தார். சிகிச்சைக்குப் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்பினார்.
இதனிடையே நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் ரிஷி கபூர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதாக அவரது சகோதரர் ரந்தீர் கபூர் தெரிவித்தார். இதையடுத்து ரிஷி கபூர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் கடைசி பாலிவுட் திரைப்படம் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான, 102 நாட் அவுட் என்ற திரைப்படமாகும். ரிஷி கபூர் கடைசியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியான தி பாடி என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். ரிஷி கபூருக்கு மனைவி மற்றும் மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா கபூர் சாஹ்னி ஆகியோர் உள்ளனர்.
இதனிடையே 1985 ஆம் ஆண்டில் வெளியான இந்தி திரைப்படமான 'சாகர்' படத்தில் பாலிவுட் நடிகரான ரிஷி கபூரும், நடிகர் கமல்ஹாசனும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தினை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். ஆகவே அன்றிலிருந்து கமல்ஹாசனுக்குப் பல ஆண்டுகால நண்பராக ரிஷி கபூர் இருந்து வந்தார். அந்தப் படம் அந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் அகாதெமி விருதுக்குக்கூடச் சென்றது.
இந்நிலையில், இவரது மறைவு செய்தியை அறிந்த நடிகர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ரிஷி கபூர் எப்போதும் ஒரு புன்னகையுடன்தான் இருப்பார். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பும் மரியாதையும் கொண்டிருந்தோம். அவரது மறைவு செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என் நண்பரை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.