சினிமா

‘காந்தாரா’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு -தமிழிலும் பார்க்க முடியுமா?

‘காந்தாரா’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு -தமிழிலும் பார்க்க முடியுமா?

சங்கீதா

கன்னட திரையுலகின் நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.

நடிகர் யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கௌடா, ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, மானசி சுதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கன்னட மொழியில் மட்டும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், எதிர்பார்த்ததைவிட கர்நாடகாவைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், 54 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இந்தப் படம் இந்திய திரையுலகை திரும்பி பார்க்கவைத்துள்ளது. ஏனெனில் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், கதை சொன்ன விதத்தாலும், நாட்டார் கலைகளை பயன்படுத்தியிருந்த விதத்தாலும், மிரட்டலான பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்புப் பெற்று, தற்போதும் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், நாளை முதல் (நவம்பர் 24) இந்தப் படத்தை ஹெச்.டி. தரத்தில் கண்டுக்களிக்கலாம். குறிப்பாக கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் இந்தப் படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 240 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், ‘காந்தாரா’ படத்தை பிரைம் சந்தாதாரர்கள் காண முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.