ரிஷப் ஷெட்டி web
சினிமா

”பாலிவுட் சினிமா இந்தியாவை மோசமாக காட்டுகிறது..” சர்ச்சையான கருத்து பற்றி விளக்கமளித்த ரிஷப் ஷெட்டி!

Rishan Vengai

கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ இந்திய சினிமாவில் ஒரு பேசும் படமாக உருவானது. இந்தப்படத்தை எழுதி, இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி, அவரே நடித்தும் ஒரு அற்புதமான சினிமா படைப்பாக காந்தாராவை உருவாக்கியிருந்தார். அந்தப்படத்தின் மூலம் ரிஷப் ஷெட்டி மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை எட்டினார்.

kantara

இந்நிலையில் ஒரு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ரிஷப் ஷெட்டி, இந்திய படங்கள் என்றாலே அது பாலிவுட் சினிமாவாக பார்க்கப்படுவதாகவும், பாலிவுட் சினிமாக்கள் இந்தியாவை மோசமான நிலையில் காட்சிப்படுத்துவதாகவும், எங்கள் மொழி மற்றும் கலைப் படத்தை எந்தவித சார்பின்மையின்றியும் நேர்மறையாக உலக அரங்கில் எடுத்துச்செல்லவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

Rishab Shetty

ரிஷப் ஷெட்டின் இத்தகைய கருத்துக்கள் பல நெட்டிசன்களை வருத்தமடைய செய்தது, சிலர் அவரை "பாலிவுட் வெறுப்பாளர்" என்று முத்திரை குத்த வழிவகுத்தது.

இந்நிலையில் அன்று பேசியது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அதுகுறித்து உரையாடலில் விளக்கமாக பேசவிரும்புவதாகவும் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.

மாற்றி புரிந்துகொள்ளப்பட்டது..

கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி MetroSaga விற்கு அளித்த பேட்டியில், ”இந்திய திரைப்படங்கள், குறிப்பாக பாலிவுட் படங்கள் பெரும்பாலும் இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்கிறது. கலைப் படங்கள் என்று அழைக்கப்படும் அந்த படங்கள் சர்வதேச நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு கவனம் பெறுகின்றன. என்னைப் பொறுத்தவரை, என் தேசம், என் மாநிலம், என் மொழி ஆகியவை பெருமைக்குரியவை. உலகிற்கு ஒரு நேர்மறையான வெளிச்சத்தில் அவற்றை வழங்குவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.

அது சர்ச்சையாக வெடித்த நிலையில், சமீபத்தில் IIFA உட்சவம் விழாவில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி, தன்னுடைய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாகவும், அதுகுறித்து பின்பு ஒரு உரையாடலில் அமர்ந்து விளக்கமளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

IIFA உட்சவம் விருதுகளில் ரிஷப் ஷெட்டி "கன்னட சினிமாவில் சிறந்து விளங்கியதற்காக" பிரத்யேகமாக கவுரவிக்கப்பட்டார். இந்த கெளரவம் அவரது சிறந்த கெளரவங்களின் தொகுப்பில் சேர்க்கிறது, இதில் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான 'காந்தாரா'வில் அவரது பாத்திரத்திற்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.