மதுரையில் புது படங்களுக்கு போட்டியாக தீபாவளி திருநாளில் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் திரையிடப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள்தான் திரையிடப்படும். இந்த திரைப்படங்களை காணவே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. பண்டிகை நாட்களில் புதிய ரிலீஸ் படங்களை மற்ற தியேட்டர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு திரையிட்டுக் கொண்டிருக்க, வழக்கம்போல் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்த பழைய படங்களை மீண்டும் ரீ ரிலிஸ் செய்து போதுமான வசூலை ஈட்டி வருகிறது.
இன்னும் பிலிம் ரோலை பயன்படுத்தும் நகரத்தின் கடைசி திரையரங்கமாக மதுரை சென்ட்ரல் தியேட்டர் இருப்பது கூடுதல் சிறப்பு. கடந்த 86 வருடங்களாக மதுரையின் மையப் பகுதியில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் சென்ட்ரல் திரையரங்கில் தீபாவளி நாளான இன்று எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. டிக்கெட்டின் ஆரம்ப விலை 15 ரூபாயிலிருந்து தொடங்குவதால் ஏழை எளிய மக்கள் எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகர்கள் என பலரும் தியேட்டரில் படம் பார்க்க குவிந்தனர்.
ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் மட்டுமே சென்ட்ரல் தியேட்டரில் திரையிடப்பட்டு வந்துள்ளது. காரணம் என்னவென்றால், ஒவ்வொரு படமும் 175 நாட்கள் முல் 250 நாட்கள் வரை ஓடி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்பொழுது செகண்ட் ரிலீஸ் போன்ற திரைப்படங்களை அவ்வப்போது திரையிடப்பட்டு வருகிறது.
பொதுவாக பண்டிகை நாட்களில் சென்ட்ரல் தியேட்டரில் சிவாஜி, எம்ஜிஆர் நடித்த பழைய படங்களை திரையிடுவதால் அந்தந்த நடிகர்களின் ரசிகர் மன்ற தலைவர்கள் இப்படத்தினை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போதும் சென்ட்ரல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள ரிக்ஷாக்காரன் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் என்றும் மக்களின் மனதை விட்டுப் பிரியாத மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதே நிதர்சனம்.