மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு போதைப்பொருள் வழங்கியதாக நடிகை ரியா சக்ரவர்த்தி குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அவரை கைது செய்தனர்.
மும்பை மாஜிஸ்திரேட் முன்பு வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜரான ரியா சக்ரவர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரியாவிற்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், ரியாவின் சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுஷாந்திற்கு போதைப் பொருட்களை விநியோகம் செய்ததாககவும் என்.சி.பி கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் அவருடைய கூட்டாளிகளான சாவந்த் மற்றும் மிராண்டா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரியாதான் சுஷாந்திற்கு போதைப் பொருட்களை வழங்கி வந்ததாகவும், மேலும் அதற்கான பணச் செலவுகளைத் தானே கவனித்துக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷோவிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜைத், பாசித் மற்றும் கெய்சென் என்பவர்கள் மூலம் சுஷாந்திற்கு வேண்டிய போதைப்பொருட்களை வழங்கி வந்ததாகவும், இவை அனைத்தும் ரியாவின் மேற்பார்வையில் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
அமலாக்க இயக்குநரகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டது. அதில் போதைப்பொருள், வாங்கியது, வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது உள்ளிட்ட குற்றங்களை ரியா ஒத்துக்கொண்டதால், கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.