லியோ, தமிழக அரசு ட்விட்டர்
சினிமா

9 மணிக்குதான் முதல் ஷோ! ’லியோ’ சிறப்பு காட்சிகள் குறித்து விஜய் ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகள் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிட வேண்டும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Prakash J

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு நாள்தோறும் எகிறிக்கொண்டே உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

நேரம் குறிப்பிடப்படாமல் 5 காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாலை காட்சி என்றே பலரால் பொருள் கொள்ளப்பட்டது. இதனிடையே, பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ’லியோ’ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: சைவ உணவிற்குப் பதிலாக அசைவ உணவு.. டெலிவரி செய்த Zomato, McDonald-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!

சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்புக் காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'லியோ'

கடந்த முறை அஜித்தின் ’துணிவு’ படத்துக்கான அதிகாலைக் காட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பெரிய நாயகர்களின் படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’விவாகரத்து பெற்றவராக சாக விரும்பவில்லை’ - 82 வயது மனைவிக்கு எதிரான 89 வயது முதியவரின் மனு தள்ளுபடி!