சினிமா

விஜய்யின் ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘சூர்யா 42’? - ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்து கசிந்த தகவல்

விஜய்யின் ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘சூர்யா 42’? - ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்து கசிந்த தகவல்

சங்கீதா

விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தை சூர்யாவின் ‘சூர்யா 42’ திரைப்படம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் -கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார். மேலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வந்ததால், அடுத்ததாக சிறுத்தை சிவாவின் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘சூர்யா 42’ என்று இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்றன. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு மோஷன் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனிருத் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான வியாபார சாதனையை, சூர்யாவின் ‘சூர்யா 42’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ‘லியோ’ படம்தான், ஓடிடி தளம், திரையரங்கு உரிமம், சாட்டிலைட், பிறமொழி வெளியீட்டு உரிமம் உள்பட பட வெளியீட்டிற்கு முன்பே 400 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்திருப்பதாக தகவல் வெளியானது. கோலிவுட்டில் இந்தப் படமே அந்த சாதனையை செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை ‘சூர்யா 42’ முந்தியுள்ளதாம்.

60 சதவிகித படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் ‘சூர்யா 42’ படத்தின் இந்தி டப்பிங் சாட்டிலைட், திரையரங்கு உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என 100 கோடி ரூபாய்க்கு வட இந்தியாவில் பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இந்த நிறுவனம் வட இந்திய உரிமையை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது ‘சூர்யா 42’ படத்தை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் 500 கோடிக்கும் மேலாக ‘சூர்யா 42’ படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.