தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இன்றுவரை இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மறுபுறம் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளதால், ஆயிரம் கோடி என்ற மைல்கல்லை முதல்முறையாக தமிழ்சினிமா எட்டிவிடாதா என்ற எதிர்ப்பார்ப்புடன் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்துவந்தனர். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் 10-ம் தேதியான ஒரேநாளில் ரிலீஸ் செய்யப்படும் என இரண்டு தரப்பும் அறிவித்திருப்பது ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.
மற்ற சினிமா இண்ட்ஸ்ட்ரீயில் ஒரு பெரிய படம் வந்தால் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரீயும் சேர்ந்து அதற்கு சப்போர்ட் பன்றாங்க, ஆனால் தமிழ்சினிமாவில் மட்டும்தான் இப்படிஎல்லாம் நடக்குது என ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எப்படியிருப்பினும் வேட்டையன் படத்துடன் கங்குவா மோதட்டும், தேதியை பின்வாங்க வேண்டாம் என சூர்யா ரசிகர்கள் படத்தின்மீதான நம்பிக்கையில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கங்குவா திரைப்படம், ரஜினியின் வேட்டையன் படமும் அதேதேதியில் வெளியாகவிருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதை எதிர்ப்பார்க்காத சூர்யா ரசிகர்கள் ரிலீஸ் தேதியை மாற்றவேண்டாம் என்றும், யார் படம் வந்தா என்ன ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கொச்சை படுத்தாதீங்க என்றும், நீங்க அப்படி தேதியை மாற்றிவைத்தால் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்துவருகின்றனர்.
மறுபுறம் சூர்யாவின் அனைத்து படங்களும் தள்ளிதள்ளி தான் வைக்கப்பட்டன, கங்குவா படத்தையாவது அதேதேதியில் ரிலீஸ் பண்ணுங்க என்று தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.