ajith kumar web
சினிமா

‘ஐ அம் பேக்’.. மீண்டும் கார் பந்தயத்திற்கு திரும்பும் நடிகர் அஜித்குமார்! வெளியான மாஸ் அப்டேட்!

திரைப்பட நடிகரான அஜித் குமார் மீண்டும் மோட்டார் கார் பந்தயத்தில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருந்துவருவதால், தற்போது அஜித் குமார் தன்னுடைய பேஷனான கார் பந்தயத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Good Bad Ugly Poster

அஜித்தை பொறுத்தவரையில் சினிமாவை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவது, துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தயாரித்தல், கேமராவை எடுத்துக்கொண்டு பயணப்படுவது மற்றும் பைக்கை எடுத்துக்கொண்டு நீண்டதூரம் பயணம் செய்வது என பல்வேறு விசயங்களில் தன்னுடைய பேஷனை வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அட்வைஸராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் போர்ச் GT3 RS ரக காரை வாங்கியிருந்த நடிகர் அஜித்குமார், தற்போது ஐரோப்பிய GT4 கார் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் பந்தயத்திற்கு திரும்பும் அஜித்குமார்..

இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு (FMSCI) பகிர்ந்திருக்கும் எக்ஸ் தள பதிவில், “இந்திய திரைப்பட நடிகரான அஜித் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளார். அவர் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக UK, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஸ்பான்சர்களும் அவர் மீண்டும் வருவதில் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் ஈடுபட இருப்பதாக இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனும் இன்ஸ்டா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில், “அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜி.டி.ரேசிங் போட்டியில் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். ஜி.டி.ரேசிங் பிரிவு போட்டியில் கலந்து கொள்ள அஜித்குமார் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது திறமைகளுக்கு எல்லையே இல்லை, அவர் 2010-ல் FIA F2 இல் ஓட்டியது எனக்கு நினைவிருக்கிறது. குட்லக் தல! நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்து உங்களை மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுத்த முடிந்தால் அது எனக்கு கிடைத்த பாக்கியமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.