சினிமா

‘இந்தியா சார்பில் முதல் ஆஸ்கர் பெற்ற கலைஞன்’ - ஒப்பற்ற படைப்பாளி சத்யஜித் ரே பிறந்ததினம்!

‘இந்தியா சார்பில் முதல் ஆஸ்கர் பெற்ற கலைஞன்’ - ஒப்பற்ற படைப்பாளி சத்யஜித் ரே பிறந்ததினம்!

subramani

இந்திய சினிமாவின் சர்வதேச முகமாக அறியப்பட்டவர் சத்யஜித் ரே. 1921 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இதே நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவருக்கு தாயும் தாய் மாமாவும் தான் உலகமாக இருந்தனர். சிறுவயது முதலே கற்பனை வளமும் கலை ஆர்வமும் கொண்ட ரே கல்கத்தாவிலேயே தனது பட்டயப் படிப்பையும் முடித்தார்.

இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் ஓவியம் பயின்ற போது ரே’வுக்கு சினிமா மீதான ஆர்வம் துளிர்த்தது. லண்டனில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்த போது நூற்றுக் கணக்கான சினிமாக்களைப் பார்த்து சினிமாவை நன்கு உள்வாங்கிக் கொண்டார். புகழ் பெற்ற இத்தாலிய திரைப்படமான பை சைக்கிள் தீஃப் திரைப்படத்தை பார்த்த சத்யஜித் ரேவுக்கு தானும் தன் வாழ்நாளில் இப்படியொரு சினிமாவை இயக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் தொற்றியது.

ஓவியமும் பயின்ற காரணத்தால் பல புத்தகங்களுக்கு அட்டைப் பட வடிவமைப்பையும் செய்து வந்தார் சத்யஜித் ரே. அப்போது பதேர் பாஞ்சாலி என்ற நூலிற்கு அட்டைப் படம் வடிவமைக்கும் பணியினை செய்ய காலம் அவரை அழைத்தது. அதுவே ரேவை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும். ஆம் அந்த புத்தகம் சத்யஜித் ரேவை ஈர்க்கவே அதனை சினிமாவாக இயக்க முடிவு செய்தார் அவர். ஆனால் அந்த சினிமா பல இன்னல்களுக்கு இடையில் நீண்டகாலமாக எடுக்கப்பட்டு ஒருவழியாக முடிக்கப்பட்டது. ஆனால் அவரது உழைப்பு வீண் போகவில்லை. சிறிய கிராமத்தை, எளிய கிராமத்து மனிதர்களை திரையில் மண்வாசனை மாறாமல் படம் பிடித்தார் ரே. தற்போது உலகின் பல திரைப்படக் கல்லூரிகளில் ஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி மாணவர்களுக்கு பாடமாக உள்ளது. துவக்கத்தில் தனது சொந்த செலவில் இப்படத்தை தயாரிக்க முயன்ற ரே ஒரு கட்டத்தில் பொருளாதார பிரச்னையில் முடங்கினார். ஆனாலும் அவர் தன்னம்பிக்கையுடன் மேற்கு வங்க அரசின் கதவுகளைத் தட்டினார். அரசாங்கமே அவரது படத்தை தயாரிக்க முன் வந்தது. தற்போது பதேர் பாஞ்சாலியை தவிர்த்துவிட்டு நீங்கள் இந்திய சினிமாவை பேசவே முடியாது.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லிஜியண்டி, பிலிபைன்ஸ் நாட்டின் கவுரவம் மிக்க விருதான மகசேசே, இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவை சத்யஜித்ரேவிற்கு வழங்கப்பட்டது. மேலும் 1985ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றார் அவர்., இவை தவிர தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் என பல விருதுகளைப் பெற்றார் சத்ய ஜித்ரே.

அனைத்துக்கும் மேலாக 1991 ஆம் ஆண்டு கவுரவ ஆஸ்கர் விருதும் சத்யஜித் ரேவிற்கு அறிவிக்கப்பட்டது. அப்போது உடல் நலிவுற்று படுக்கையில் கிடந்த சத்யஜித் ரேவைத் தேடி ஆஸ்கர் வந்து சேர்ந்தது. உலகின் எந்த கலைஞனுக்கும் கிடைத்திடாத மரியாதையாக அப்போது அது பார்க்கப்பட்டது. இந்தியா சார்பில் முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றவர் ரே என்பது எத்தனை பெரிய பெருமை நமக்கு பாருங்கள்.

சத்யஜித் ரே'வின் பதேர் பாஞ்சாலி தவிர்த்து அவருடைய மற்ற படைப்புகளான அபராஜிதோ, சாருலதா உள்ளிட்ட படங்கள் அனைத்துமே காலத்தின் பொக்கிஷம். இவை தவிர பல்வேறு ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார் சத்யஜித் ரே. அதில் நாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதி பற்றி 1976’ல் அவர் இயக்கிய ஆவணப்படம் முக்கியமானது. இன்று சத்யஜித் ரே’வின் 99’வது பிறந்த தினம். 20’ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற படைப்பாளியாக வாழ்ந்த சத்யஜித் ரேவை இந்நாளில் நினைவு கூர்வோம்.