கே.பாலசந்தர் கோப்புப்படம்
சினிமா

#RememberingKB | புதுப்புது நடிகர்களை வைத்து, புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிய கே.பாலசந்தர்!

சினிமாவின் சிறப்புகளை வெளிப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

PT WEB

செய்தியாளர் - புனிதா பாலாஜி

-----------

சினிமாவில், உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்துவது தனி கலை... அந்தக் கலையில் சிகரம் தொட்டு சிறந்து விளங்கிய முக்கிய இயக்குநருக்கு இன்று 9ஆம் ஆண்டு நினைவு தினம்.

கதையில் பார்க்கும் கதைமாந்தர்கள் எதார்த்தத்தை அதிகம் பேசுகிறார்களா?... உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள் இவரின் திரைப்படங்களில் உரக்கப் பேசுகிறார்களா?

நல்ல கதைகளுக்குள், திகட்டாத நகைச்சுவை நிறைந்திருக்கிறதா?... இப்படி, வெவ்வேறு வடிவங்களில் வாழ்வியலும், வலிகளும் பேசப்படுகிறது என்றால், அது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் படமாகத்தான் இருக்கும்.

சினிமாவுக்கு முந்தைய கலையான நாடகத்துறைதான், இவருக்கு அரிச்சுவடி கற்றுக்கொடுத்த ஆதிக்கலை, நாடகத்துறையில் இருந்து வந்ததால் எழுத்து இவருக்கு வசப்பட்டது. அழுத்தமான கதைகளை, ஆழமான திரைக்கதையாக உருவாக்கும் திறன் கொண்டவர், கே.பாலசந்தர். இவர், தன் கற்பனையில் உருவாகும் கதைமாந்தர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக்கி, திரைக்காட்சிகளில் உலவவிட்டார்.

சினிமாவின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலகட்டமான 1965-ஆம் ஆண்டில் வெளியானது, நாகேஷின் நீர்குமிழி திரைப்படம். அதுதான் பாலச்சந்தரின் முதல் படைப்பு. காமெடியனாக அறிமுகமாகி, குணச்சித்திர நடிகரான நாகேஷ்தான் இப்படத்தின் ஹீரோ. அதன்பின், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை வைத்தும் முக்கிய படங்களைக் கொடுத்தார். நட்சத்திர நாயகர்களை மட்டுமே கொண்டு ஹிட் கொடுக்கும் படைப்பாளி அல்ல இவர். மாறாக நட்சத்திரங்களை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைப்பவர். ரஜினி எனும் மாஸ் நடிகரும், கமல்ஹாசன் எனும் கிளாஸ் நடிகரரும் இவரின் இயக்கத்தில் அறிமுகமானவர்கள்தான்.

கே.பாலசந்தர்

இவர்கள் மட்டுமின்றி, அவள் ஒரு தொடர்கதை படத்தில் சுஜாதா, நிழல் நிஜமாகிறது படத்தில் சரத்பாபு, ஷோபா... டூயட் படத்தில் பிரகாஷ் ராஜ், வறுமையின் நிறம் சிகப்பில் எஸ்.வி.சேகர். அடுத்து ராதாரவி, விவேக், விஜயகுமார், டெல்லி கணேஷ், சரிதா என திரையுலகில் கோலோச்சிய பல நடிகர்களை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர், இயக்குநர் சிகரம் பாலச்சந்தர்...

முதல் பார்வையிலேயே, முதல் சந்திப்பிலேயே ஒருவரின் முழுத்திறனை கணிக்கும் திறன் கொண்டவர்.. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாலச்சந்தர், திரைத்துறையில் தொடாத ஜானர்கள் கிடையாது... காமெடி, காதல், சீரியஸ் ஜானர் என உணர்வுகள் வழியே உரையாடியவர்... வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களை கட்டமைப்பதே பாலச்சந்தரின் ஸ்பெஷல்.

இயக்குநராக இருந்து சின்னத்திரையில் தடம் பதித்த பாலச்சந்தர், தயாரிப்பாளராகவும் புதுமை செய்திருக்கிறார்... தாதாசாகேப் பால்கே விருது, 7 தேசிய விருது என திரை ஆக்கத்துக்காக பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்ற பாலச்சந்தர், தமிழ் சினிமாவின் தனித்துவக் கலைஞன்..! அவரை எப்போதும் அவரின் கலை வழியே இந்த உலகம் நினைவுகொண்டே இருக்கும்!