1961ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அவை பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும். இந்த மூன்று படங்களையும் இயக்கியிருந்தவர் நடிகர் திலகத்தால் பீம்பாய் என செல்லமாக அழைக்கப்பட்ட பீம்சிங்.
2024, பீம்சிங்கின் நூற்றாண்டு. இதனை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், சினிமா பேக்டரி அமைப்பும் இணைந்து நேற்று கொண்டாட்டமாக நடத்தியது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிவகுமார், தலைமை தாங்கினார். கே.பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நடிகர் விக்ரம்பிரபு, இயக்குநர் பீம்சிங்கின் உருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி பீம்சிங் உருவாக்கியிருந்த பாத்திரங்களாகவே மாறியிருந்தனர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற திரைக்கலைஞர்கள். இப்பாத்திரங்களை தங்களோடு பொருத்திப் பார்த்த தமிழ்த் திரை ரசிகர்கள் இப்படங்களை மாபெரும் வெற்றி பெறச் செய்தனர்.
இத்தகைய நுட்பமான திரை அறிவை அவர் பெற்றது அந்நாளில் இரட்டை இயக்குநர்களாக புகழ் பெற்ற கிருஷ்ணன் - பஞ்சுவிடம். தனது மனைவியின் சகோதரரரான கிருஷ்ணன் மூலமே திரைத்துறைக்குள் நுழைந்தார் பீம்சிங். கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் மட்டுமின்றி படத்தொகுப்பிலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுத் தேர்ந்தார்.
1954ல் கலைஞரின் எழுத்தில் உருவான அம்மையப்பன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பீம்சிங். தொடர்ந்து ராஜா ராணி, பதிபக்தி போன்ற படங்களை தந்த பீம்சிங், பாகப்பிரிவினை, படிக்காத மேதை போன்ற படங்களின் மூலம் பெரும்புகழ் பெற்றார். இந்நாளில் தமிழ்த் திரையுலக ஆளுமைகளில் முக்கியமானவராக விளங்கும் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா பீம்சிங்கின் படைப்பே.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், பீம்சிங் இணைந்தால் அப்படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தளிப்பவையாக அமையும். அவையும் அப்படங்களின் வெற்றிக்கு கட்டியம் கூறும். பாகப்பிரிவினை, களத்தூர் கண்ணம்மா, பாவ மன்னிப்பு, பாசமலர் போன்ற திரைப்படங்கள் தேசிய அளவில் அவருக்கு பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுத் தந்த படங்களில் முக்கியமானவை.
தமிழில் கலைஞர், முரசொலி மாறன், ஆரூர்தாஸ் போன்ற புகழ் மிக்கவர்களுடன் இணைந்து பணியாற்றிய பீம்சிங், தமிழ்ப் புதின உலகில் முத்திரை பதித்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களையும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளையும் திரைமொழிக்குக் கொண்டு வந்தார்.
ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த பீம்சிங்கின் புதல்வர்தான் புகழ் பெற்ற படத்தொகுப்பாளரும், இயக்குநருமான பி. லெனின். பாரதிராஜாவின் கண்களாக விளங்கிய பி. கண்ணனும் பீம்சிங்கின் புதல்வரே. பீம்சிங்கின் படங்கள் வெறும் திரையிடலுக்கானவை மட்டுமல்ல, உறவுகளையும், உரிமைகளையும் பேணிக்காக்க எடுத்துரைக்கப்பட்ட பாடங்கள். அவரது இந்த நூற்றாண்டில், நம்மோடு அவர் இல்லையென்றாலும், அவர் படைப்புகள் வழியே அவரையும் அவர் சொல்லிச் சென்ற கருத்துக்களையும் நினைவுகூர்வோமாக!