யானை தந்தங்கள் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லால் மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வீடு, அலுவலகங்கள் உள்பட சில இடங்களில் 2012-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள். பின் அந்த தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர், மோகன்லாலிடம் நடத்திய விசாரணையில் யானை தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் மோகன்லால் மீது நீதிமன்றத்தில் ஏலூர் பகுதியை சேர்ந்த பவுலோஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், மோகன் லால் முறையான அனுமதி இல்லாமல் வீட்டில், யானைத் தந்தங்கள் வைத்து இருந்ததாக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுபற் றி விசாரணை நடத்தி அவர்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்நிலையில், மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருப்பதில் தவறு இல்லை என்று அரசு, நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மோகன்லாலுக்கு எதிரா ன வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் இயக்கத்துக்கான தேசிய கூட்டமைப்பின் இயக்குனர் விளயோடி வேணு கோபால் மற்றும் நிஜாமூதின், பி.கோபாலன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
’போதிய ஆவணங்கள் இல்லாமல், யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருந்தார். இந்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக, கேரள வனத்துறைச் சட்டத்தை மீறியிருக்கிறது. மத்திய பொது தணிக்கைக்குழு அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.