புதுமைபித்தன், மாரி செல்வராஜ், அண்ணாதுரை pt web
சினிமா

அண்ணாவின் ‘செவ்வாழை’ முதல் மாரியின் ‘வாழை’ வரை - தமிழ் சமூகத்தின் எதார்த்தம் இதுதான்...

அண்ணாவின் ‘செவ்வாழை’ முதல் மாரியின் ‘வாழை’ வரை - நம் மனசாட்சியை உலுக்கும் தமிழ் சமூகத்தின் யதார்த்தம்!

Rajakannan K

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வாழை...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் தமிழத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அப்படம். அதேவேளையில், படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகும் விவாதம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. வாழை படத்திற்கு ஆதரவாக பெரும்பாலான விமர்சனங்கள் வந்தபோதும் சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன.

வாழை ட்ரைலர்

சமூக வலைதளங்களில் பகிரப்படும் பல கருத்துக்களை பார்க்கையில், தமிழ்ச் சமூகம் கடந்துவந்த பாதை குறித்த புரிதல் இவ்வளவு குறைவாக உள்ளதே என்று எண்ணத் தோன்றுகிறது. நம்முடைய சமுதாயம் எவ்வளவு ஏற்றத்தாழ்வோடும், மனிதாபிமானம் இல்லாமையாலும் சூழப்பட்டிருக்கிறது என்பதை பலரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

விவசாயிகள் குறித்த புரிதல்

விவசாயிகள் என்றாலே ஒரு தட்டையான புரிதல் பலருக்கும் இருக்கிறது. விவசாயிகளில் பல தரப்பினர் இருக்கிறார்கள். முதலில் இதனை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஒருவர் உழுதுண்போர், மற்றொருவர் உழுவித்துண்போர். மூன்றாக பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் விவசாயக் கூலிகள், சிறு, குறு விவசாயிகள், பணம் படைத்த பணக்கார விவசாயிகள். விவசாயக் கூலிகளும், சிறு-குறு விவசாயிகளும் தங்களுடைய உழைப்பால் நிலத்தை பயிர் செய்பவர்கள்.

கூலிக்காக, பண்ணையடிமையாக வேலை செய்த விவசாயக் கூலிகள் பட்ட துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதேபோல், சிறு-குறு விவசாயிகள் பணக்கார விவசாயிகளால் தொல்லைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். இவர்கள் என்னதான் சுதந்திரமானவர்களாக தோன்றினாலும் அவர்களுடைய நிலங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் பணக்கார விவசாயிகளால் பிடுங்கிக் கொள்ளப்படும். எழுத்தாளர் பூமணி தன்னுடைய வெக்கை நாவலில் இதனை தெளிவாக காட்சிப்படுத்தி இருப்பார். நமக்கு தெரிந்ததெல்லாம் இந்த சிறு விவசாயிகள் மட்டுமே. அவர்கள் நல்லவர்கள். அதுமட்டுமேதான் நமக்கு தெரியும்.

வாழை படத்தில் நடப்பது போன்று நடந்துள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். இதற்கான பதிலாக, இரண்டு முக்கியமான சிறு கதைகளை இங்கே நாம் பார்க்கலாம். இரண்டுமே வெறும் சில பக்கங்களை கொண்ட காத்திரமான கதை.

கொடுக்காப்புளி மரம்!

புதுமைப்பித்தன் சிறுகதை பலவும் சில பக்கங்களிலேயே பளிச்சென்று கருத்தை மனதில் இருத்திச் செல்பவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் கொடுக்காப்புளி. பசியார கீழே கிடந்த கொடுக்காப்புளியை ஆசையாக எடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்தான் இந்த கதை. யாசகம் கேட்டு வாழும் தனது தந்தையுடன் சுற்றித்திரிந்த அந்த சிட்டுக்குருவிக்கு இப்படியொரு துயர முடிவா? என்று நம்மை அந்தக் கதை உலுக்கிவிடும். ஒரு வாழைப்பழம் பறித்தால் இப்படியா நடந்து கொள்வார்கள் என்று கேட்பவர்கள் இந்த கதையை படித்தால், உங்கள் உள்ளம் குற்ற உணர்வால் துடிதுடிக்கும். கதையின் கடைசி சில வரிகள் இங்கே..

... சுவாமிதாஸ் ஐயர் சில்லறை எடுக்க வீட்டிற்குள் சென்றார்.

கூட வந்த குழந்தை. கொடுக்காப்புளிப் பழம் செக்கச் செவேலென்று அவளை அழைத்தன. ஓடிச்சென்று கிழிந்த பாவாடையில் அள்ளி அள்ளி நிரப்புகிறது.

வெளியே வந்து கொண்டிருந்த சுவாமிதாஸ் ஐயர் கண்டுவிட்டார். வந்துவிட்டது கோபம்.

“போடு கீழே! போடு கீழே!” என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார்.

குழந்தை சிரித்துக்கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக் கம்பை எறிந்தார்.

பழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக்கொண்டு சற்றுதூரத்தில் சென்று விழுந்தது” என்று தமிழ் சமூகத்தில் ஏழைகள் தங்கள் உயிரை எப்படியெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டியிருப்பார் புதுமைப்பித்தன்.

அண்ணாவின் ‘செவ்வாழை’

முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரையின் அரசியல் வாழ்க்கை கவனிக்கப்படும் அளவிற்கு அவரது இலக்கியப் பணி அதிக அளவில் திரும்பிப் பார்க்கப்படுவதில்லை. அண்ணாவின் கதைகளில் முத்தாய்ப்பானது ‘செவ்வாழை’. பள்ளிகளில் பலரும் பாடமாய் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. சில பக்கங்களே கொண்ட இந்த கதையில் அன்றைய ஏழை விவசாயிக்கும் பண்ணையாருக்கும் இடையிலான வாழ்க்கை வித்தியாசத்தை படம் பிடித்து காட்டியிருப்பார் அண்ணா. தன்னுடைய சொந்த உழைப்பில் ஆசையாக வளர்த்த செவ்வாழை, பண்ணையார் குடும்பம் வசம் எப்படி பறிபோகிறது என்பதை நம் இதயங்கள் கலங்கிப் போகும் அளவிற்கு சொல்லியிருப்பார் அண்ணா.

பேரறிஞர் அண்ணா

ஆசைப்பட்ட எதையுமே உண்ண முடியாத ஏக்கம் நிறைந்த வாழ்க்கையை ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை,

“.. அவர்களின் வசம் பெருமை பேசும்படி மோட்டார், ரேடியோ, வைரமாலை இல்லாத காரணத்தால் செவ்வாழை அவர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது”,

“நாங்கள் என்ன காசு போட்டு திராட்சை, கமலா ஆரஞ்சல்லாமா வாங்கித் தரச் சொல்கிறோம்..”

- போன்ற வார்த்தைகளால் பளீச்சென்று சொல்லி இருப்பார்.

“செவ்வாழை ஒன்றுதான் சொந்தமாக மொத்தமாகப் பலன் பெறுவதற்கு உதவக் கூடிய உழைப்பு... பண்ணையாருக்கு வயல் சொந்தமானதாக இருப்பதால் பலனை அவர் அனுபவிக்கிறார்” என்று உழைப்பவனுக்கு ஏதும் சொந்தமில்லையே என்ற ஏக்கத்தை சொல்வதோடு, “உழைப்பவனுக்கு நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா?” என்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய வாழ்க்கை குறித்த கனவையும் விதைத்திருப்பார் அண்ணா.

ஒரு விவசாயியின் உழைப்பால் விளைந்த பொருள் அவனுக்கே கிடைக்காமல் எப்படி அந்நியப்பட்டு போகிறது என்பதை இறுதியில் அண்ணா சொல்லும் போது படிப்பவர்களுக்கு அப்படியிருக்கும்.

நாம் கண்ணை கட்டிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா?

“நான்கு நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குச் செல்லும் முத்துவிஜயாவின் வெள்ளித்தட்டில் ஒரு சீப்பு செவ்வாழை. கணக்குப் பிள்ளை நாலு சீப்பு செவ்வாழையைக் கடைக்காரனுக்கு விற்றிருந்தான். (தன்னுடைய வீட்டில் வளர்ந்த செவ்வாழை கடையில் விற்பனைக்கு). ஆனால், கடைக்காரனோ காலணாவுக்கு தரமுடியாது என்று விரட்டினான். அவனுக்குத் தெரியுமா? அவன் வீட்டில் விளைந்த பழம் எட்டாத உயரத்தில் இருக்கிறது என்று?.” இதுதான் அண்ணா உதிர்த்த வரிகள். இதுதான் அன்றைய யதார்த்த நிலை.

நாம் கண்ணை கட்டிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா?

நாம் வாழும் இந்த உலகம் மிகப்பெரியது. இங்கே பல விதமாக மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால், நாமோ ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து கொண்டு மற்றவர்களின் நிலை அறியாமல் போகிற போக்கில் கருத்துக்களை பதிவிடுகிறோம். இனியாவது உண்மையான யதார்த்த நிலையை அறிந்து கொள்ள முற்படுவோம்.