சினிமா

“போராடுவோம், போராடுவோம்” - நிழல் காலாவும் நிஜ ரஜினியும்

rajakannan

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்த ரஜினிகாந்த், பின்னர் பேசியது அரசியல் வட்டத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் வெளியான‘காலா’ படத்தின் டிரைலரில் "மனித உடல்களே மிகப்பெரும் ஆயுதம்" என வசனம் பேசும் ரஜினிகாந்தை, நிஜத்துடன் ஒப்பிட்டால் முரணாக உள்ளது.  

மும்பை தாராவியை கதைக்களமாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம்‘காலா’. இந்தப் படம் நில உரிமையை பிரதானப்படுத்தி தயாராகியிருப்பதை படத்தின் பாடல்களும், சமீபத்தில் வெளியான டிரெய்லரும் உறுதி செய்யும் விதமாக இருந்தன. அதோடு டிரெய்லரில் போராட்டம், சமூகநீதி உள்ளிட்டவை குறித்து ரஜினிகாந்த் ஆக்ரோஷமாக பேசும் காட்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஆனால், தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ரஜினி, பிறகு செய்தியாளர்களை சந்திக்கையில் போராட்டமே வேண்டாம் என்றார். அதோடு, போராட்டம் வன்முறையாக மாற, சமூக விரோதிகளே காரணம் என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். பொதுவாக ரஜினியின் திரைப்படங்களில் வரும் காட்சிகளும், வசனங்களும் அவருடைய நிலைப்பாடாகவே ரசிகர்களால் பார்க்கப்படும். அந்தவகையில், ‘காலா’ படத்தில் பெரும்பான்மை வசனங்களும், பாடல்களும் போராட்டத்தை போற்றும் விதமாகவே உள்ளன.

ஆனால், ‘காலா’ படமும், கரிகாலன் கதாப்பாத்திரமும் வெறும் நிழல், நிஜத்தில் தான் வேறு என்பதை உணர்த்தும் வகையிலேயே ரஜினிகாந்தின் தூத்துக்குடி பேச்சு இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.