சினிமா

‘பத்மாவத்’வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்

rajakannan

பத்மாவத் திரைப்படம் வெளியாகும் சினிமா திரையரங்குகளை கொளுத்துவோம் என்று கர்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. 

பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கைக் குழு கடந்த மாதம் யு/ஏ சான்றிதழ் அளித்தது. தணிக்கைக் குழு அளித்த பரிந்துரையின் படி பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு சில காட்சிகள் திருத்தப்பட்டன. இதனையடுத்து பத்மாவத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மாவத் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் கோகமெதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்மாவத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனிடையே, பாத்மாவத் திரைப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலப்சந்த் கட்டாரியா கூறுகையில், “சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை வாரியம் நீக்கி இருந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை நீக்கவில்லை என்றால், நாங்கள் அதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆட்சேபிக்கக் கூடிய கதையுடன் பத்மாவத் படம் வெளியாவதை ஏற்றுக் கொள்ள முடியாது”என்றார்.