ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா. ரஞ்சித் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அட்டைப் படத்தில் இடம்பெற்ற பாடகர் ஷான் வின்செண்ட் பால் டி ’தெருக்குரல்’ அறிவுக்கு ஆதரவாகவும் இயக்குநர் பா.ரஞ்சித்தை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் ’நீயே ஒளி’ பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான ’தெருக்குரல்’ அறிவின் படம், அதில் இடம் பெறவில்லை.
” ‘தெருக்குரல்’அறிவு படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை” என்றும் ”அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். அவரின், பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த அறிக்கையில், ”இந்தத் தருணத்தில் மட்டுமல்ல. நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவளிப்பேன் அறிவு. உங்கள் பிரதிநிதித்துவத்துக்கான தேடலுக்குப் பின்னால் நிற்கிறேன். நீங்கள் தொடர்ந்து பலருக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்கள் கடின உழைப்பை நான் என்றும் அவமதிக்கவோ எடுக்கவோ மாட்டேன். இதுகுறித்து, முழு விவாதத்தையும் தொடரவே விரும்புகிறேன். உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் விரும்புகிறேன் அறிவு” என்று பாடகர் அறிவுக்கு ஆதரவளித்திருப்பவர், இயக்குநர் பா.ரஞ்சித்தை விமர்சித்துள்ளார்.
“பா.ரஞ்சித் பொறுப்பற்ற முறையில் தமிழ் இசைக் கலைஞர்களிடையே கசப்பையும் பிரிவையும் உண்டாக்கியுள்ளார். அவரின் ட்வீட்டால் நான் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானேன். என்னுடைய தற்போதைய நிலைக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தான் பொறுப்பு. அவரை பின் தொடரும் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கு பொறுப்பற்ற முறையில் கருத்திட்டுள்ளார். நான் ஏன் அட்டையில் இருக்கிறேன்? அறிவு ஏன் இல்லை என்பதில் எந்தப் போட்டியும் இல்லை.
நான் ஐந்து வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ‘மேட் இன் யாழ்ப்பாணம்’ என்ற எனது ஆல்பத்தை மஜ்ஜாவுடன்தான் வெளியிடுகிறேன். அதற்காகத்தான் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளேன். அதேபோல, பாடகி தீயும் தனது முதல் ஆங்கில ஆல்பத்தையும் மஜ்ஜாவுடன்தான் வைத்திருக்கிறார். இதற்காக, சில நாட்களாகவே வேலை செய்து வருகிறார். எனவே, நாங்கள் மஜ்ஜாவின் முதல் இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருப்போம். இந்தக் கவர் ஸ்டோரி எங்கள் அறிமுக வெளியீடுகளைத்தான் குறிக்கிறது.
பா.ரஞ்சித்தின் ட்வீட்டால் மக்கள் என்னை கேள்விக்குள்ளாக்கி நான் உண்மையில் தமிழனே இல்லை என்றுக்கூறி என் அடையாளத்தையே தாக்கினர். இது எனது இரண்டு தமிழ் சமூகங்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்த்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.