சினிமா

‘பாகுபலி2’ மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் - நடிகர் பிரபாஸ் இன்ஸ்டா பதிவு 

‘பாகுபலி2’ மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் - நடிகர் பிரபாஸ் இன்ஸ்டா பதிவு 

webteam
‘பாகுபலி2’ படத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் குறித்து நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி2’. இதனை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி இருந்தார். ஏற்கெனவே இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் மாபெரும் வெற்றியை அடைந்தது.  இதில் ராணா டகுபதி, பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகளவில் பாக்ஸ் ஆபீசில் ஏறக்குறைய 1,810 கோடி ரூபாயை வசூலித்தது. ஆகவே அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகம் எப்போது வரும் எனத் திரை ரசிகர்கள் காத்துள்ளனர்.
 
 
 இந்தப் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சமூக ஊடகத்தில் பலரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.  #3YrsForMightyBaahubali2 மற்றும் #3YearsforHistoricBaahubali2 ஹேஷ் டேக்குகளைப் போட்டு அதன் நினைவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  தமிழ், தெலுங்கு, இந்தி, என மொழிகளைக் கடந்து இந்தப் படத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு தென்னிந்திய படத்திற்கு இதுவரை இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்ததே இல்லை என்றே கூறப்படுகிறது.
 
 
இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் 3 ஆண்டுகள் நிறைவைப் பற்றியும் அப்படத்தின் நாயகன் பிரபாஸ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “பாகுபலி 2  தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல; என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், இதை மறக்கமுடியாத புரொஜட்டுகளில் ஒன்றாக மாற்றியது எனது ரசிகர்கள்தான். அதற்காகப் படக்குழு மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ‘பாகுபலி 2 ’மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் நான் பெற்ற அனைத்து பட வாய்ப்புகளுக்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
 
 
அதேபோல் நடிகை தமன்னா, “அற்புதமான மற்றும் மிக செழிப்பான ‘பாகுபலி 2’ படத்தின் 3 ஆண்டுகளை நாங்கள் ஏற்கெனவே கொண்டாடினோம்.  இதை  ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என  நினைத்துப் பார்க்கவில்லை. இதன் மூலம் இயக்குநர் ராஜமெளலி  இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகியது. மகிழ்ச்சியான ஒரு பெரிய குடும்பத்தைப் போல என்னுடன் பணியாற்றிய பாகுபலியின் முழு படக்குழுவினருக்கும், இந்தப் படத்தின் பார்வையாளர்களுக்கும், திரைப்படத்தை நேசித்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.