தலையில் பீரை ஊற்றி கொண்டாடிய இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ராம், நபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ’ஐ ஸ்மார்ட் சங்கர்’ . புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், 18 ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. புரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்க்க, ஐதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அஜய் பூபதி, அகசியா ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் ராம் கோபால் வர்மா சென்றார்.
தியேட்டருக்குச் சென்றதும் அவர், ’ஹெல்மெட் இல்லாமல் மூன்று பேர் பைக்கில் சென்றோம். போலீசார் எங்கே? தியேட்ட ருக்குள் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் பைக்கில் சென்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இதைக் கண்ட சைபராபாத் போக்குவரத்து காவல்துறை, ’போக்குவரத்து விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இதே போன்ற பொறுப்புணர்வைதான் எதிர்பார்க்கிறோம். தியேட்டரில் மட்டுமல்ல, போக்குவரத்து போலீசார் சாலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பல சர்க்கஸ்-களையும் நாடகங்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தது. பின்னர் அவருக்கு, விதியை மீறியதற்காக 1,335 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீதை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.
இதையடுத்து ’ஐ ஸ்மார்ட் சங்கர்’ படத்தின் சக்சஸ் பார்ட்டி இரவு நடந்துள்ளது. அப்போது ராம்கோபால் வர்மா போதையில் பீரை தனது தலையில் ஊற்றினார். பின்னர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மியின் தலைமையிலும் நடிகை நிதி அகர்வாலின் தலையிலும் மதுவை ஊற்றியுள்ளார். இதுபற்றிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து ராம் கோபால் வர்மா பைத்தியம்போல நடந்துகொள்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள ராம் கோபால் வர்மா, ’நான் பைத்தியமல்ல. ஐ ஸ்மார்ட் சங்கர் படம்தான் என்னை பைத்தியக்கார னாக்கி விட்டது. இதற்கு இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி ஆகியோரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் விளம்பரத்துக்காக, ராம் கோபால் வர்மா இப்படி செய்வதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.