போதைப்பொருள் வழக்கில் என்னை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிடக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் நடிகை ரகுல்ப்ரீத்சிங்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் ஊடகங்கள் தன்னை பற்றிய செய்திகளை இணைத்து ஒளிபரப்பவோ அல்லது கட்டுரைகளை வெளியிடவோ தடைவிதித்து இடைக்கால உத்தரவு வழங்கவேண்டும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். என்.சி.பி தனது விசாரணையை முடித்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்வரை ஊடகங்களுக்கு இந்த தடையை விதிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் என்.சி.பி தற்போது போதைப்பொருள் பயன்பாடு என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது. போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை என்சிபி விசாரித்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் என்.சி.பியால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கின் சமீபத்திய செய்திகளின்படி தீபிகா படுகோன், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சிமோன் கம்பட்டா ஆகியோரின் மொபைல் போன்கள் என்சிபியால் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தனிப்பட்ட நுகர்வோரை மட்டும் பிடிக்காமல், அவர்களுக்கு எவ்வாறு போதைப்பொருள் வழங்கப்படுகிறது என்பதையும் விசாரிக்க விரும்புகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.