சினிமா

தெலுங்கில் ரூ.100 கோடியில் உருவாகிறது 'ராக்‌ஷசுடு' இரண்டாம் பாகம்

தெலுங்கில் ரூ.100 கோடியில் உருவாகிறது 'ராக்‌ஷசுடு' இரண்டாம் பாகம்

நிவேதா ஜெகராஜா

'ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கான 'ராக்‌ஷசுடு' இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியானது. தற்போது தெலுங்கில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

'முண்டாசுப்பட்டி' வெற்றிக்கு பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் ராம்குமார் தனது முதல்பட கூட்டணியை மீண்டும் ஏற்படுத்தி, இரண்டாவதாக 'ராட்சசன்' என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார். 'முண்டாசுப்பட்டி' படத்தை விட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'ராட்சசன்' 2018 வெளியான வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.

இதனால் ரீமேக் உரிமையை கைப்பற்றுவதில் பெரும் போட்டியே நிகழ்ந்தது. தெலுங்கில் ஒரு பெரிய தொகைக்கு இந்தப் படம் வாங்கப்பட, பிரபல தயாரிப்பாளரின் மகனான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், நாயகன் விஷ்ணு விஷால் கேரக்டரில் நடித்தார்.

நாயகி அமலாபால் கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, தமிழ் 'ராட்சசன்', தெலுங்கில் 'ராக்‌ஷசுடு' ஆனது. குறைந்தப் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரமேஷ் வர்மா என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.23 கோடி வசூலித்தது எனக் கூறப்பட்டது. மேலும், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் படம்.

இந்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது இரண்டாம் பாகத்துக்கு தயாராகிவிட்டது 'ராக்‌ஷசுடு' படக்குழு. தமிழில் இன்னும் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் எழாத நிலையில், தெலுங்கில் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கிற்காக தயாராகிவிட்டார்கள். முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார் என தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா அறிவித்துள்ளார். மேலும், சில தகவல்களையும் படம் தொடர்பாக பேசியிருக்கிறார்.

''முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். இதனால் முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறோம். ராக்‌ஷசுடு 2 ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான்-இந்தியா எடுக்கவிருப்பதால் பெரிய நட்சத்திரங்களுடன் பேசி வருகிறோம். முழுமையாக லண்டனில் படமாக்க இருக்க்கிறோம். ரமேஷ் வர்மாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார். என்றாலும் சரியான நேரத்தில் ஹீரோவின் பெயரை அறிவிப்போம்.

இதற்கிடையே, இந்தியில் 'ராட்ஷசுடு' முதல் பாகம் ரீமேக் ஆக இருக்கிறது. இதற்காக அக்‌ஷய் குமார் நேரடியாக உரிமைகளை வழங்க எங்களை அணுகினார். அவர் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் ரீமேக் உரிமைகளை உடனடியாக கொடுத்துவிட்டோம். பாலிவுட்டிலும் ரமேஷ் வர்மாவே இயக்குகிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றார் தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா.