சினிமா

ரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்!

ரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்!

webteam

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தின் கதை, மும்பை ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைக் கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தந்தையை கடத்தல்காரராக சித்திரிக்க வேண்டாம் எனக் கூறி ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர், நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் யார் இந்த ஹாஜி மஸ்தான் என்று தேடினோம். கிடைக்கிறது, இந்த ராமநாதபுர தாதா பற்றி ஏராளமான தகவல்கள்.

மஸ்தான் ஹைதர் மிர்சா அல்லது ஹாஜி மஸ்தான் என்கிற இவர் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் பிறந்தவர். 8 வயதில் தந்தையுடன் மும்பை சென்றார். 1944ல் துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியானார். பிறகு கரீம் லாலா என்பவருடன் இணைந்து பணியாற்றினார். 1960களில் பெரும் பணக்காரர் ஆனார். வரதாபாய் என்கிற வரதராஜ பெருமாளுடன் நெருக்கமான இவர், பின்னர் அவருடன் இணைந்து பல்வேறு தொழில்கள் செய்தார். ரியல் எஸ்டேட், சினிமா பைனான்ஸ் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்த மஸ்தான், மும்பை தாராவி பகுதியில் தமிழர்களின் பாதுகாவலர்களாக வலம் வந்தார்.

திரைப்படங்களையும் தயாரித்துள்ள இவருக்கு அமிதாப் பச்சன், திலிப் குமார், ராஜ்கபூர், தர்மேந்திரா உட்பட பலர் தோஸ்து. இந்திய நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1984 முதல் அரசியலில் ஈடுபட்ட இவர், 1985 ல் தலித் முஸ்லீம் நல்வாழ்வு மகா சங்கத்தை மும்பையில் தொடங்கினார். 1994ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.

அமிதாப்பச்சன் நடித்து 1975ல் வெளியான ’தீவார்’ எனும் இந்தி படம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ’தீ’ என்ற பெயரில் உருவானது.

2010 ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ’ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை’ இந்திப் படம், மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.