சினிமா

பாபா முத்திரைக்கு எழும் காப்பிரைட் பிரச்னை

webteam

பாபா முத்திரைக்கு காப்பி ரைட் பிரச்னை எழுந்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி கடந்த 20 ஆண்டுகாலமாக தமிழகத்தை தலை சுற்ற வைத்துக் கொண்டிருந்தது. அதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி முறையாக முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி’ என்று கூறினார். அதனையொட்டி ‘பாபா’ படத்தில் வரும் முத்திரையை அவர் தனது ரஜினி மக்கள் மன்றம் லோகோவாக பயன்படுத்தி வருகிறார். ஏறக்குறைய கட்சியின் சின்னமாக இந்த முத்திரையே இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மிக அரசியல் என்பதால் இந்த முத்திரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் பாபாவின் அபான முத்திரைக்கு உரிமை கோரி மும்பை நிறுவம் ஒன்று ரஜினிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியின் பாபா படத்திற்காக அந்த முத்திரைக்கான காப்பி ரைட்டை முறைப்படி பட நிறுவனம் வாங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் பயன்படுத்திய தலைப்பாகை, கத்தி இவற்றிற்கும் காப்பி ரைட்டை பட நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படத்திற்காக வாங்கப்பட்ட காப்புரிமை அரசியல் கட்சியாக மாற்றபட்டிருக்கும் ஒரு அமைப்புக்கு பொருந்துமா என்பது குறித்து ரஜினி தரப்பில் ஆலோசித்து வருவதாகவும் தகவல் கசியத் தொடங்கியுள்ளது.