ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அண்ணாமலை. இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாலிவுட்டில் வெளிவந்து குத்கார்ஸ் படம்தான் இயக்குநர் பாலச்சந்தர் தயாரிப்பில் தமிழில் அண்ணாமலையாக ரீமேக் ஆனது. நண்பனுக்காக எதையும் செய்யும் அண்ணாமலை கதாப்பாத்திரம், ஒரு கட்டத்தில் அந்த நண்பனுக்கே போட்டியாளனாகி, வெற்றியடைவதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த திரைக்கதையாக்கி ரசிக்க வைத்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. ரசனையான காதல் காட்சிகள், நகைச்சுவை, நட்பு, செண்டிமெண்ட் என சரிவிகிதத்தில் கலந்த அண்ணாமலை திரைப்படம், வெளியான சமயத்தில் டிரெண்ட் செட்டர் திரைப்படமாகவும் அமைந்தது. குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ் என நடிகர்கள் கூட்டணியும், தேவாவின் பின்னணி இசை, பாடல்களும் 25 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அண்ணாமலையை வைத்திருக்கிறது. 1992 ஆம் ஆண்டு ஜூன் 27ம் தேதி அண்ணாமலை திரைப்படம் வெளியானது. அதோடு, இந்தப் படம்தான் பின்னாளில் ரஜினிகாந்த், சுரேஷ்கிருஷ்ணா கூட்டணியில் 'பாட்ஷா' எனும் மாபெரும் வெற்றிப்படம் உருவாவதற்கான அடிப்படையாகவும் அமைந்தது.
இந்தப்படத்தில் இடத்தில் இடம்பெற்ற வசனங்கள் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை கோபப்படுத்தியாதாக கூறப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டைத் தாண்டி தனது வீட்டிற்கு சென்ற ரஜினியின் காரை மறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியாக கூறப்பட்டது. இதனால் அப்செட் ஆன ரஜினி அங்கிருந்து அவர் வீட்டிற்கு நடந்தே சென்றதாகவும் கூறப்பட்டது. அண்ணாமலை ரிலீசான சமயத்தில் சென்னை மாநகராட்சி சுவர்களில் திரைப்படப்போஸ்டர்களை ஒட்டக்கூடாது என தடைவிதித்தது. அந்த காலகட்டத்தில் செய்தித் தாள் விளம்பரம் மட்டுமே பயன்படுத்தி அண்ணாமலை ரிலீசானது.