சினிமா

ரஜினி முடிவு பப்ளிசிட்டியா? அரசியலுக்கான முன்னோட்டமா?

ரஜினி முடிவு பப்ளிசிட்டியா? அரசியலுக்கான முன்னோட்டமா?

Rasus

ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் நாளை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ரசிகர்களையும் சந்திக்க உள்ளதாக அவர் அறிவித்திருப்பது, அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் 2.o படத்தை ஓடவைக்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந் ரசிகர்மன்ற நிர்வாகிகள் கூட்டம் நாளை நடக்கிறது. ரஜினி இதில் கலந்துகொள்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் திடீரென ரத்து செய்தார். எனினும் வரும் 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை, ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். ரஜினியின் இந்தத் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியலில் பிரவேசிக்கும் முயற்சியா என்ற கேள்வியையும் இந்த நடவடிக்கை எழுப்பியிருக்கிறது.

அண்மையில் ரஜினிகாந்த், ஆர்கே நகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரனை சந்தித்த புகைப்படம் வெளியானபோது அவர் அந்த கட்சிக்கு ஆதரவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி விளக்கம் அளித்தார். எனில் அவருக்கு அரசியல் குறித்த வேறு முடிவுகள் இருக்கின்றனவா என்ற கேள்வியும் முன்நிற்கிறது. தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்போம் என ரசிகர் மன்றத்தில் கூறுகின்றனர். ரசிகர்களின் மனநிலை இவ்வாறு இருக்க, பொதுமக்களின் எண்ண ஓட்டம் பல விதங்களாக எதிரொலிக்கிறது. ரஜினி ரசிகர்களைச் சந்திப்பது விரைவில் வெளியாக உள்ள 2.o படத்தை ஓட வைக்கும் விளம்பர உத்தியா அரசியலில் நுழைவதற்கான முன்னோட்டமா என்று பேச்சும் ரசிகர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.